Skip to main content

2000 ரூபாய் நோட்டு: கள ஆய்வில் நக்கீரன் - வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

 Shocking information on the 2000 rupee note issue

 

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு, ‘நாளை முதல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என அறிவித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. வங்கி வாசலிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் கோடிக்கணக்கான மக்கள் நின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். செல்லாது என அறிவிக்கப்பட்ட தாள்களுக்கு மாற்றாக 2 ஆயிரம் ரூபாய் தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

2023 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது என அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. மே 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தினமும் 10 நோட்டுகள் வரை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதனைக் கேட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

 

பெட்ரோல் பங்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கிக்கொள்ளப்படும் என அறிவித்தது தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம். அதேபோல் போக்குவரத்துக் கழகங்களிலும் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவித்தாலும் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வாங்குவதில்லை என்பதை நமது நேரடி கள ஆய்வு தெரிவித்தது.

 

நாம் சில பெட்ரோல் பங்குக்கு செய்தியாளர் என்கிற அடையாளம் இல்லாமல் சென்று 2000 ரூபாய் தாள் தந்து 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொன்னபோது, 2000 ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்க. 500, 1000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் சில்லறை தரக்கூடாதுன்னு முதலாளி சொல்லியிருக்காரு என்றார். மற்றொரு பங்கில் 2000 வாங்காதிங்கன்னு முதலாளி சொல்லியிருக்காருங்க. அதனால் வாங்கமாட்டேன் என்றார். இப்படியே எல்லா பங்குகளும் கூறினர்.

 

இது பற்றி ஒரு பெட்ரோல் பங்க் ஊழியர் நம்மிடம், “தினமும் 30 பேராவது 2000 ரூபாய் நோட்டு எடுத்துக்கிட்டு வந்து 100 ரூபாய்க்கோ, 200 ரூபாய்க்கோ பெட்ரோல் போடுங்கன்னு சொல்றாங்க. அவங்க பேங்குக்கு போகத் தயங்கிக்கிட்டு இப்படி நோட்டு மாத்த முயற்சிக்கறாங்க. அதனால் தான் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கறதில்லை. 2000 ரூபாய்க்கு பெட்ரோலோ, டீசலோ போட்டால் வங்கிக்கறோம்” என்றார்.

 

இவர்கள் சொல்வதில் கொஞ்சம் மட்டுமே உண்மை. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தருகிறேன். ஒரு நோட்டுக்கு 100 ரூபாய் கமிஷன் எனச் சொல்லி ஊருக்கு ஊர் பெரும் கும்பலே சுற்றுகிறது. அவர்கள் சிலர் பெட்ரோல் பங்குகளிலும் உள்ளார்கள். 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படுகிறது என்கிற அறிவிப்பு வந்த அன்றைய இரவே தங்கநகை, டைமண்ட், பிளாட்டினம் விற்பனையகமான ஜுவல்லரிகளில் பெரும் அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட்காரர்கள், பைனான்ஸியர்கள், அரசு அதிகாரிகள் குவிந்தார்கள். ஜி.எஸ்.டி பில் இல்லாமல் நகைகளாக வாங்கினார்கள். திருவண்ணாமலையில் நகைக்கடைக்காரர்கள் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தனியாக கமிஷன் வாங்கினார்கள். அரசியல்வாதிகளிடம் உள்ள பணமெல்லாம் நகைக்கடை, பெட்ரோல் பங்க் வழியாக மாற்றப்படுகின்றன. இதனால் பொதுமக்களிடம் உள்ள 2000 ரூபாய் பணத்தை வாங்க மறுக்கிறார்கள் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்