Skip to main content

9 நாட்கள் குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மிதந்த அழுகிய சடலம்; தெரியாமல் நீரைப் பயன்படுத்திய மக்கள்

Published on 31/01/2023 | Edited on 01/02/2023

 

Shocked as the body floated in the drinking water tank

 

விருதாச்சலம் அருகே பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீர்த் தேக்கத் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மூன்றாவது மகனான சரவணகுமார் கடந்த 9 நாட்களாக காணவில்லை. இதன் காரணமாக அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் பட்டியலின மக்கள் தாங்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு வரும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக ஊராட்சி நிர்வாகத்திடம் இன்று புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் ஊராட்சி நிர்வாக ஊழியர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றனர். அப்போது மேலே சென்று பார்த்தபோது குடிநீர் தொட்டிக்குள் துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  

 

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் தீயணைப்பு துறை உதவியுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் முதலில் நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்த தண்ணீரை முழுவதும் வெளியேற்றிவிட்டு, தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கயிறு கட்டி மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், நீர்த்தேக்கத் தொட்டியில் சடலமாகக் கிடந்தது கடந்த ஒன்பது நாட்களாக காணாமல் போன சிவசங்கரின் மகன் சரவணக்குமார் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

கடந்த 9 நாட்களாக, சம்பந்தப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் குடிநீரைத் தான் அக்கிராமத்தில் உள்ள அனைவரும் உணவு சமைப்பதற்காகவும், குடிநீராகவும் பயன்படுத்தி உள்ளனர். சடலம் கிடந்த தொட்டியில் இருந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி உள்ளதால், மருத்துவக் குழு அமைத்து அக்கிராம மக்களை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் செல்லும் பைப் லைனை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டுமெனவும் அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சரவணக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்