நடைபெறவிருக்கின்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவரான செல்லப்பாண்டியன், நாம் தமிழர் கட்சியினர் தனக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
மது குடிப்பவருக்கு ஆதரவாக அவ்வப்போது அறிக்கை விடுத்து தானும் தமிழக அரசியல் களத்தில் இருப்பதாக காட்டிக் கொள்வதில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினருக்கு அவ்வளவு அலாதி பிரியம்..!
இந்த முறை அறிக்கைக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் பாட்டில் சின்னம் பெற்று சுயேச்சையாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் சங்கத்தின் மாநிலத் தலைவரான செல்லப் பாண்டியன். இது இப்படியிருக்க, தமிழக அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் திமுக தலைவர் ஸ்டாலினை சீண்ட, திமுக தலைவருக்கு ஆதரவாக, "சீமானுக்கு நாவடக்கம் வேண்டும்" என்ற தலைப்பிட்டு, தமிழக அரசியலில் சிறுவயது முதல் திராவிட இயக்கத்தில் பயிற்சி பெற்று, சாதி மதமற்ற சமத்துவத்தை நிலை நாட்டிட பெரும் முயற்சியால் பல அரசியல் தலைவர்களுடன் கன்னியமான அரசியல் நாகரீகத்தை கடைப்பிடித்து வரும் தளபதி ஸ்டாலினைப் பற்றி இழிவாக பேசுவதாக நினைத்து, தமிழக இளம் தலைமுறையினருக்கு இழிவான அரசியலை கற்றுக்கொடுக்க வேண்டாம்" என அறிக்கையினை வெளியிட்டுள்ளார் செல்லப்பாண்டியன். இது தற்பொழுது எதிர்வினையாற்ற காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்து புகாரளித்துள்ளார் அவர்.
"திமுக தலைவர் ஸ்டாலினோட அருமைத் தெரியாமல் சீமான் பேசியதைக் கண்டித்தேன். இதிலென்ன தவறு இருக்கின்றது.? நான் அறிக்கை வெளியிட்டதிலிருந்தே தமிழகத்தின் பல தரப்பிலிருந்தும் ஒருமையில் பேசி என்னை மிரட்டி வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். அத்தோடு மட்டுமில்லாமல் கொலை மிரட்டலும் விடுகின்றனர். அதனால் காவல்துறையின் உதவியை நாட வேண்டியதாயிற்று" என்கிறார் பாட்டில் சின்ன வேட்பாளரும், மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவருமான செல்லப்பாண்டியன். இதனால் திருப்பரங்குன்றத்தில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.