Skip to main content

உயிரை காவு கேட்கும் டாஸ்மாக் வேண்டாம்! போராட்டத்தில் குதித்த கிராமமக்கள்!

Published on 01/08/2018 | Edited on 27/08/2018

 

protest

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த குடுமியாங்குப்பம் கிராமத்தில் சில வாரங்களுக்கு முன்பு  அரசு மதுபான கடையை கட்ட முற்பட்ட போது அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வாட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை மனு அளித்தனர். 

 

ஆனாலும் ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில்  புதிதாக அரசு  மதுக்கடை திறக்கப்பட்டது. அதனால் குடுமியாங்குப்பம் மட்டுமின்றி பல்வேறு கிராம மக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் அந்த மதுக்கடையை கடந்து செல்ல வேண்டியுள்ள நிலையில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் மது அருந்துபவர்கள் போதையில் அவ்வழியை கடக்கும் பெண்களை கிண்டல்,  கேலி செய்ததால் பிரச்சினை  ஏற்படும் சூழல் நிலவியது.

 

இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் அந்த மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணிவிகள் பண்ருட்டி - சேலம் நெடுஞ்சாலையில்  சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

 

தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு தலைமையில் போலீசார்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக இழுத்து அப்புறப்படுத்த முயன்றனர்.  அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்ளுக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. அதன்பின்னரும் மக்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில் காவல்துறையினர் மதுக்கடை திறக்கப்படாது என  அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பண்ருட்டி - சேலம் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது