கரும்பு தோட்டம் ஒன்றில் சிவ லிங்கம் மற்றும் நந்தி சிலை கைப்பற்றப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் கரும்பு பயிர் செய்திருந்தார். இந்நிலையில் நன்கு விளைந்த கரும்பை அறுவடை செய்து சர்க்கரை ஆலைக்கு அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் கரும்பை வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது சாக்கு பை ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்த போது அதில் ஐம்பொன்னால் ஆன ஒரு அடி உயரம் கொண்ட சிவலிங்கம் ஒன்றும் அரை அடி உயரம் உள்ள நந்தி சிலை ஒன்றும் இருந்துள்ளது.
பணியாளர்கள் இது குறித்து பார்த்தசாரதிக்கு தகவல் அளித்தனர். அவர் உடனடியாக திருப்பாலப்பந்தல் காவல்துறைக்கும் சங்கராபுரம் வட்டாட்சியர் சரவணனுக்கும் தகவல் அளித்துள்ளார். உடனடியாக அவர்கள் சிலைகள் கிடந்த அந்த கரும்பு வயலுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய வட்டாட்சியர் சரவணன் அந்த சாமி சிலைகளை மீட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார். கரும்பு வயலுக்குள் சிலைகள் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கரும்பு வயலில் ஐம்பொன்னால் ஆன சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.