Skip to main content

தற்கொலைக்கு முயன்ற மாணவி; பாலியல் சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியர்!

Published on 10/08/2017 | Edited on 10/08/2017
தற்கொலைக்கு முயன்ற மாணவி; பாலியல் சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியர்!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் புனித இன்னாசியார் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 27-ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். இதில், தலைமை ஆசிரியராக பாதிரியார் சகாய டேனியல் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் பிரபு என்பவர் கடந்த வாரம் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உள்பட ஆறு பேரை திருப்பூருரில் நடைபெற்ற கபடி போட்டிக்காக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் போட்டி முடித்து திரும்பி வரும் வழியில், 8-ம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் பிரபு பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். வீட்டுக்கு வந்த மாணவி இதுகுறித்து தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் மறுநாள் காலை பள்ளி நிர்வாகத்தை போனில் தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை கூறி அந்த ஆசிரியரை கண்டிக்குமாறு கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தலைமை ஆசிரியர் அந்த ஆசிரியரை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த ஆசிரியர் பிரபு தன் மீது புகார் கூறிய சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து, மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி, நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்றதும் பெற்றோர்களுக்கு தெரியாமல் செடிகளுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்துள்ளார். மாணவி வாந்தி எடுத்ததை தொடர்ந்து அவர் விஷம் குடித்ததை தெரிந்துகொண்ட பெற்றோர் மாணவியை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

முதலுதவிக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை கொடுத்தும் முன்னேற்றம் இல்லாத நிலையில், அங்கிருந்து மீண்டும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம்பாளையம், ஆனந்தம்பாளையம், சித்தாறு மற்றும் குதிரைக்கல்மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலை 10.30 மணி அளவில் திடீரென பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், “பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரபு, மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அவரை வெளியே வரச்சொல்லுங்கள்...” என்று கூறினர்.

அதற்கு பள்ளி நிர்வாகத்தினர், ‘அந்த ஆசிரியர் இன்று பள்ளிக்கு வரவில்லை, அவர் விடுமுறையில் உள்ளார் என்று கூறியுள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கல் வீசி பள்ளி அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்தனர். இதன் காரணமாக பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ-மாணவிகளை வெளியே அனுப்பிய பள்ளி நிர்வாகத்தினர் பள்ளியை மூடினார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலை 11-மணி அளவில் அம்மாபேட்டை-அந்தியூர் செல்லும் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் அங்கு சென்று பொதுமக்களை அழைத்து வைத்து பள்ளி வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனால் மாணவியிடம் தகாத முறையில் நடந்த உடற்கல்வி ஆசிரியர் பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இங்கு வர சொல்லுங்கள். “நாங்கள் அவரிடம் பேச வேண்டும்...” என்று  பொதுமக்கள் கூறினர்.

அதற்கு பள்ளி நிர்வாகத்தினர், ‘அவர் பள்ளியில் இல்லை. வெளியே சென்றுவிட்டார். அவர் இன்றைக்கு இங்கே வரமாட்டார்’ என்றனர். அதற்கு பொதுமக்கள், ‘அந்த ஆசிரியர் வந்தால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறினர். ஆனால் அதை பள்ளி நிர்வாகத்தினர் ஏற்க மறுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மதியம் இரண்டு மணிக்கு அம்மாபேட்டை சென்று மேட்டூர்-பவானி செல்லும் அந்தியூர் பிரிவு ரோட்டில் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து போலீசார் ஈரோட்டில் இருந்து அதிவிரைவுப்படை, ஆயுதப்படை போலீசாரை வரவழைத்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் போராட்டம் நடத்தியவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சிலருக்கு இலேசான காயம் ஏற்ப்பட்டது.

இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்ற நிலை நிலவுகிறது. இந்தநிலையில் பள்ளிக்கு வராமல் கொடிவேரியில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பிரபுவை கைது செய்துள்ள அம்மாபேட்டை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- பெ.சிவசுப்பிரமணியம் 

சார்ந்த செய்திகள்