சசிகலா, தினகரனை நீக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை -தங்க. தமிழ்ச்செல்வன்
புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர்.
அவர்கள் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறியதாவது,
இன்றைக்கு சென்னையில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இதிலிருந்து எடப்பாடி அரசுக்கு ஆதரவு இல்லை என்பது தெளிவாகிறது. அந்த கூட்டத்தில் சசிகலா, தினகரனை நீக்குவதாக அறிவித்துள்ளனர். சசிகலா, தினகரனை நீக்க அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்றால் சசிகலாவால் நியமிக்கப்பட்ட அவைத் தலைவர் செங்கோட்டையன் நியமனமும், பொருளாளர் சீனிவாசன் நியமனமும் செல்லாது என்று அறிவிப்பார்களா..?
இரண்டு நாட்கள் கால அவகாசம் உள்ளது. நிச்சியமாக ஆளுநர் எங்களை அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளுநர் அழைக்க மறுக்கும் பட்சத்தில் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்திக்க முடிவு எடுத்து இருக்கிறோம்.
முதல்வர் பதவிக்கு எடப்பாடியை தேர்வு செய்தது செல்லாது என மாஃபா வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வழக்கை வாபஸ் பெறாத நிலையில் பாண்டியராஜனுக்கு எப்படி அமைச்சரவையில் சேர்க்க முடிந்தது...?
எதையும் சட்டப்படி செய்யவில்லை. ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே ஆனால் கட்சி? கட்சி இருந்தால் தான் ஆட்சியை பிடிக்க முடியும். அதனால் தான் தொகுதி மக்கள் மற்றும் சொந்தங்களை மறந்து 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மனக்கஷ்டத்தோடு புதுச்சேரியில் தங்கி உள்ளோம், உல்லாசமாக யாரும் இங்கு தங்கவில்லை. மிக விரைவில் நல்ல முடிவு வரும்.
எங்களுக்கு கட்சி வேண்டும் என்ற காரணத்திற்காகவும், ஒற்றுமையை காட்டிக்கொண்டு இருக்கிறோம்.
மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது தான் மத்திய அரசின் வேலை. ஆனால் அதிமுகவில் நடைபெற்று வரும் உட்கட்சி பிரச்சனைக்கு பா.ஜ.க வின் ஏன் இவ்வளவு வேகம் காட்டுகிறார்கள்...? அதற்கான காரணம் என்னவென்று எங்களுக்கு புரியவில்லை? 100% அதிமுவும், பாஜகவும் இனைந்து விட்டது. அவர்கள் சொல்படிதான் இவர்கள் செயல்படுகின்றனர். இந்த நிலைப்பாட்டில் சென்றால் இந்த அரசு அதிமுக கட்சியை வளர்ப்பதற்கான நிலைப்பாட்டில் இல்லை என்பது எங்களுக்கு தெரிந்துவிட்டது. எனவே எங்களுக்கு கட்சி தான் முக்கியம் அதனால் தான் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இங்கு இருக்கிறோம். கட்சியை ஒற்றுமையாக வழி நடத்த வேண்டும். அம்மாவின் அரசு நல்லாட்சி தரும் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம்.
-சுந்தரபாண்டியன்