தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான், அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (23/03/2021) தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக முகமது ஜான் காரில் வீட்டிற்குச் சென்றார். பின்னர், மீண்டும் பிரச்சாரத்திற்காக காரில் புறப்பட்ட அவருக்கு வழியில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக வாலாஜாவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிர் பிரிந்ததாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, முகமது ஜான் எம்.பி.யின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த 2011- ஆம் ஆண்டில் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ராணிப்பேட்டை தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் முகமது ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து, 2019- ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்னும் நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் முகமது ஜான் எம்.பி. காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.