காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதை வரவேற்று அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் சண்முக சுந்தரம் சார்பில் அறிக்கை வெளியடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதை மனமார வரவேற்கிறோம். இவ்வறிவிப்பை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அதை சட்டமாக்க வேண்டும். மத்திய அரசும் இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய மாநில அரசு உயர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரிப்படுகையில் வேறு எந்த தொழில்களையும் அனுமதிக்கக்கூடாது விவசாயத்தைத் தவிர. கடலோரப் பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடச் செய்ய மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மீன்வளத்தையும், மீன்பிடித் தொழிலையும் பாதிக்கவல்லது என்பதால் ஹைட்ரோகார்பன் எடுப்பதை கடலோரப் பகுதிகளில் அனுமதிக்கக் கூடாது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை பின்வாங்கச் செய்யவும், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் 600 கி.மீ.மனிதச் சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திய பல்வேறு அரசியல் இயக்கங்கள் பொதுநல இயக்கங்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.