சேலத்தில் இளம்பெண்களை தற்கொலைக்கு தூண்டியதாக ரியல் எஸ்டேட் மோசடி மன்னன் வின்ஸ்டார் சிவகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். கூட்டுறவு மில் தொழிலாளி. மில் மூடப்பட்ட பிறகு வேலைக்குச் செல்லாமல் இருந்து வருகிறார். இவருக்கு ஐந்து மகள்கள். இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பே தாய் இறந்துவிட்டார்.
அழகேசனின் மூன்றாவது மகள் மேனகா (33), நான்காவது மகள் ரேவதி (28), கடைசி மகள் கலைமகள் (26) ஆகியோரில் மேனகாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில், திருமணத்திற்கு ஒரு நாள் இருந்தபோது, அதாவது கடந்த 28.8.2018ம் தேதியன்று இரவு சகோதரிகள் மூன்று பேரும் திடீரென்று குறுணை மருந்தை தண்ணீரில் கலக்கி தற்கொலைக்கு முயன்றனர்.
ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கல்யாண ஏற்பாடுகளைச் செய்யாமல் விளையாட்டுத்தனமாக இருந்ததால் தந்தை திட்டியதாகவும், அதனால் மனம் உடைந்து மூவரும் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் பரவின.
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஓரிரு நாள்களில் உறவினர்கள் மூன்று சகோதரிகளையும் மீட்டு சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள யுனிவர்சல் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, கடந்த 28.9.2018ம் தேதியன்று மேனகா இறந்துவிட்டார். ரேவதி மட்டும் உயிர் பிழைத்துக் கொண்டார். மற்றொரு சகோதரி கலைமகளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேனகா, கலைமகள், ரேவதி
அப்போதுதான் சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றதிலும், ஒருவர் அநியாயமாக உயிரிழந்ததன் பின்னணியிலும் வேறு விவகாரம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. சகோதரிகளில் ஒருவரான ரேவதி, சேலத்தில் செயல்பட்டு வந்த வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது, நிலத்தில் முதலீடு செய்யும் தொகையை ஒரே ஆண்டில் இரட்டிப்பு மடங்காக தருவதாக வின்ஸ்டார் நிறுவன அதிபர் சிவகுமார் உள்ளூர் டிவி சேனல்கள், பத்திரிகைகளில் பகிரங்கமாக விளம்பரம் செய்தார். அதை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் முதலீடுகளை கொட்டினர். ரேவதியும், தனது மூத்த சகோதரி காந்திமதி மற்றும் உறவினர்களிடம் 15 லட்சம் ரூபாய் பெற்று வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்.
ஒரு கட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் முதலீடுகள் சேர்ந்த நிலையில், சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தைக் திருப்பிக் கொடுக்காமல் சிக்கலில் மாட்டிக்கொண்டார் சிவகுமார். இது தொடர்பாக அவர் மீது பலரும் புகார்கள் கொடுக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில்தான், தனது அக்காளின் திருமண நாள் நெருங்கியதால் முதலீட்டுத் தொகையை திருப்பித் தருமாறு ரேவதி, வின்ஸ்டார் நிறுவன அதிபர் சிவகுமாரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தைத் தர முடியாது என்றும், யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்து கொள் என்றும் எகத்தாளமாக கூறியுள்ளார்.
அதற்கு ரேவதி, பணம் கிடைக்காவிட்டால் அக்காளின் திருமணம் நின்று விடும். பிறகு நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று புலம்பினார். அதற்கு சிவகுமார், நீங்கள் செத்துப்போனாலும் கவலை இல்லை என்று சிவகுமார் கூறியதாக ரேவதி கூறினார். அதன்பிறகே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து மனம் உடைந்த சகோதரிகள் மூவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி அவர்கள் குறுணை மருந்தை நீரில் கலக்கி குடித்துள்ளனர்.
மேற்கண்ட விவரங்களை எல்லாம் விரிவாக கைப்பட எழுதி அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார் ரேவதி. ஆனால், போலீசாரோ, தந்தை திட்டியதால் மகள்கள் மூவரும் தற்கொலைக்கு முயன்றதாக எப்ஐஆரில் பதிவு செய்திருந்தனர். இதனால் மேலும் விரக்தி அடைந்த ரேவதி தரப்பினர், சில நாள்கள் முன்பு சேலம் போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
இது ஒருபுறம் இருக்க, தீவிர சிகிச்சையில் இருந்த மற்றொரு சகோதரி கலைமகளும் சிகிச்சை பலனின்றி 15.10.2018ம் தேதி மாலை 3.45 மணியளவில் இறந்துவிட்டார். காலை 11.30 மணியளவில் கண் முழித்துப் பார்த்ததுடன், சுய நினைவுடன் இருந்த கலைமகள் அடுத்த சில மணி நேரங்களில் இறந்து விட்டதாக மருத்துவர்கள்¢ கூறியதால், உறவினர்கள் சிகிச்சையின்மீது சந்தேகம் அடைந்தனர்.
இதற்கிடையே சிகிச்சை கட்டணமாக 4 லட்சம் ரூபாயை செலுத்திவிட்டு சடலத்தைப் பெற்றுச்செல்லுமாறு மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதற்கும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சடலத்தைப் பெற்றுச்செல்லவும் மறுத்தனர். திங்கள் கிழமை இரவு 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர். சிகிச்சை கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்று மருத்துவமனை இறங்கி வந்தததை அடுத்து, நள்ளிரவு 12.30 மணியளவில் சடலத்தைப் பெற்றுச்சென்றனர்.
கலைமகளின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 16, 2018) பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே மேனகா இறப்பின்போது சிஆர்பிசி 174வது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த அம்மாபேட்டை போலீசார், கலைமகளும் இறந்ததால் அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக வின்ஸ்டார் நிறுவன அதிபர் சிவகுமார் மீது இதச பிரிவு 306ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், சிவகுமாரை கைது செய்ய தனிப்படை போலீசாரும் விரைந்துள்ளனர். விரைவில் சிவகுமார் கைது செய்யப்படுவார் எனத்தெரிகிறது.