
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மாநில உரிமையை பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழ்நாடு அரசை பாராட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு சுப்ரீம் கோர்ட்டு தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, சிறப்பு சட்டம் பிரிவு 142-ஐ பயன்படுத்தி அம்மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வரவேற்கிறது. இது கூட்டாட்சி கோட்பாட்டிற்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற நாளிலிருந்தே தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி வருவதையும், அரசியல் சாசனத்தின் மாண்புகளை மீறி தன்னிச்சையாக செயல்படுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். மேலும் தமிழக சட்டமன்றத்தின் கண்ணியத்தை குலைக்கும் செயல்களில் ஈடுபட்டதோடு, தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அரசியல் உள்நோக்கத்தோடு ஒப்புதல் அளிக்காமலும் காலம் கடத்தி வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தும், சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, அம்மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான கால வரம்பை நிர்ணயித்து நாடு முழுவதும் கவர்னர்கள் தன்னிச்சையான போக்கிற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மாநில உரிமையை பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழ்நாடு அரசையும் பாராட்டுகிறோம்.
மேலும் அரசியல் சாசனத்திற்கும், தமிழக நலன்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், குடியரசு தலைவர், தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக நீக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது” தெரிவித்துள்ளார்.