பெங்களூருவைச் சேர்ந்தவர் ராஜா ரவிசேகர். சென்னை வேளச்சேரியில் இவரது தாயார் சாந்தா ரோச்சிக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு விற்பனை செய்து தருவதாகக் கூறி சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவர் பவர் எழுதி வாங்கி உள்ளார். இதற்கு முன்பணமாக ரூ.20 லட்சம் கொடுத்த அவர், மீதமுள்ள பணம் ரூ.85 லட்சத்தை நிலத்தை விற்று கொடுத்து விடுவதாகக் கூறி உள்ளார்.
இந்த நிலையில் போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை தேவன் என்பவருக்கு கிருஷ்ணப்பா மோசடியாக கிரைய பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். இதற்கு டாக்டர் ஏகாம்பரம் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து ராஜா ரவிசேகர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணப்பா, தேவன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்தநிலையில் கிருஷ்ணப்பா ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 30- ஆம் தேதிக்கு கோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.