கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த முளகுமோடு பகுதியில் தீபம் தியேட்டர்ஸ் என்ற பெயரில் நடன குழு நடத்தி வருபவர் ஜான் பிலிப்போஸ். இவரது நடனக் குழுவில் நடன இயக்குனராக உள்ள அபி அஜித்குமார் என்பவர் தான் மேடை நடன நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நடனத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஏழை மாணவி ஒருவர் இந்த குழுவிற்கு சென்றுள்ளார். மாணவியின் நடனத்தை ரசித்த அபி அஜித்குமார் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கூறியுள்ளான்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி இந்த நடனப் பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பல விசாரணைகளுக்கு பிறகும் அந்த மாணவி என்ன ஆனார் எங்கு போனார் என்பது தெரியாத ஒன்றாகவே இருந்தது. இந்நிலையில் காவல் ஆய்வாளர் இசக்கி என்பவர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு கோயில் விழாவில் நடன நிகழ்ச்சி ஒன்றில் இருந்த நடன இயக்குனர் அபி அஜித்தை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அதேபோல் மாணவியை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்தார் அந்த மாணவி...
சினிமா இயக்குனர் ஒருவர் திருச்செந்தூர் வந்திருப்பதாகவும் அவர் கதாநாயகி தேர்வில் ஈடுபட்டுள்ளார் என்றும் ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு அஜித் குமார் மாணவியை அழைத்து சென்றுள்ளான். ஆனால் திருச்செந்தூர் செல்லாமல் அஜித்குமார் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு நண்பரை அவரது வீட்டில் சினிமா இயக்குனர் என்று அறிமுகம் செய்து வைத்து மாணவியை நிர்பந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இப்படியே சினிமாக்காரர்கள் என பொய்யான தகவல்களை கூறி மாணவியிடம் பலர் தவறாக நடந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து மாணவி காவல் துறையில் புகார் அளித்து விடக்கூடாது என்பதற்காக மாணவியை அபிஅஜித் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடனே வைத்துக் கொண்டு ஊர் ஊராக மேடை நடனங்களில் ஆட வைத்து பிழைப்பு நடத்தி வந்ததாக மாணவி காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து மேடை நடன இயக்குனராக அபி அஜீத்தை கைது செய்த காவல்துறையினர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.