புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கத்தில் திருவரங்குளம் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேல், தலைமையில் தொகுதிப் பொறுப்பாளர்கள் புஜ்பராஜ், மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்ட, வட்டார, பேரூர் என அனைத்து நிர்வாகிகளும், முன்னாள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் கிருமி நாசினி மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.
கூட்டத்தில் ப.சிதம்பரம் எம்.பி பேசியதாவது, ''ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஆயிரம் வாக்குகள் இருக்கும். அதில் ஒவ்வொரு சமுதாயத்தில் இருந்தும் வாக்குகளை பெற தொடர்ந்து உழைக்க வேண்டும். கடுமையான போட்டி நிலவும். கடைசியில் தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும். பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி உறுதி செய்யப்பட்ட போதே தி.மு.க கூட்டணியின் வெற்றியும் உறுதியாகிவிட்டது. தமிழக மக்கள் ஒருபோதும் பா.ஜ.க வை ஏற்க மாட்டார்கள். பா.ஜ.க ஒரு நச்சுச்செடி. தமிழகத்தில் பா.ஜ.க உரம் போட்டாலும் வளராது. அரசியல், பணம், ஆதிக்கம் செய்து வரலாம் என்று நினைப்பார்கள் அது முடியாது. அதற்கு உதாரணம்தான் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள். பெரியார் பகுத்தறிவை வளர்த்தார். காங்கிரஸ் கட்சி தமிழ் அறிஞர்களை வளர்த்தது. கீழடி நம் நாகரீக கலாச்சாரத்தை வெளிக்காட்டுகிறது. இந்தியை நாங்கள் வெறுக்கவில்லை இந்தி திணிப்பை தான் வெறுக்கிறோம். கனிமொழி எம்.பியிடம் இந்தியில் பேசுகிறார்கள், மதுரை எம்.பி வெங்கடேசனுக்கும், முதலமைச்சர் எடப்பாடிக்கும் இந்தியில் கடிதம் எழுதுகிறார்கள். இது இந்தி ஆதிக்க உணர்வைக் காட்டுகிறது. இந்தி, இந்து, இந்துத்துவா என்பதை ஏற்க முடியாது. முதல் செம்மொழி 'தமிழ்' என்பதை காங்கிரஸ் அரசு கொண்டு வந்து அதற்கான மையத்தையும் உருவாக்கியது. அதை மைசூரில் ஒரு பிரிவாக வைக்கிறது பா.ஜ.க.
பா.ஜ.க ஜனநாயக கட்சி இல்லை. வாஜ்பாய் காலத்தில் தான் ஜனநாயக கட்சியாக இருந்தது. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்று சொல்லிவிட்டு ஒரே கட்சி பா.ஜ.க என்று சொல்ல நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. சில மாநிலங்களை நம்மிடம் இருந்து திருடிக் கொண்டார்கள். ஆனால் அதையும் மீட்போம். 100 நாட்கள் நாம் கடுமையாக உழைத்தால் போதும் 200 தொகுதிகளை வென்று தமிழ் புத்தாண்டில் தமிழன்னைக்கு படைப்போம். இந்த ஆட்சியில் 98 வயதிலும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வேளாண் திருத்தச்சட்ட மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை அவர்கள் கேட்காமல், நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்கள்'' என்று பேசினார்.