நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் எங்கு திரும்பினாலும் துர்நாற்றம் வீசுவதும்,ஈக்கள் கொசுக்கள் முகத்தில் வந்து மொய்ப்பதும் என சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துவதுமாக இருக்கும் நிலையில் பெருகிவரும் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம், தொகுதி எம்எல்ஏ வான பாரதியிடமும் தாசில்தாரிடமும் பலமுறை கொடுத்துவிட்டனர். அவர்கள் யாரும் காதில் வாங்கிக்கொள்ளாத நிலையில் நூதனமான முறையில் கோரிக்கைகளை மையமாக வைத்து போஸ்டர் அடித்து வீதிகள் தோறும் ஒட்டப்பட்டு அதன் மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்தை ஈர்க்க வைத்திருக்கின்றனர்.
நாகை மாவட்ட ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதனமான முறையில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டியை வைத்தீஸ்வரன்கோவில் முக்கிய பகுதிகளில் ஓட்டியுள்ளனர் பாஜகவினர். அதோடு வாட்ஸ் அப் குழுவிலும் அதை பதிவு செய்துள்ளனர். அந்த சுவரொட்டியில் உள்ள கோரிக்கைகளோ," மாவட்ட ஆட்சியருக்கு கனிவான வேண்டுகோள், வைதீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவில் சேறும் சகதியுமான சாலையை தார் சாலை அமைக்க பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிடவேண்டும், மேலவீதியில் தச்சர் தியாகி குமரன் தெரு சாலைக்கு இடையூறாக வழிவிடாமல் மழை நீர் வடிகால் கட்டிய நிலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதை அப்புறப்படுத்த வேண்டும், விளம்பர தட்டிகள் பந்தல் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
மீன் மார்க்கெட் கழிவுகளால் துர்நாற்றம் வீசும் வடிகால் வாய்க்கால் பகுதிகளை சுகாதார நலன் கருதி சுத்தம் செய்யவும் கொசு ஒழிப்பு மருந்துகளை தினமும் தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." உள்ளிட்ட கோரிக்கைகளை அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் படித்து அவரவர்கள் வாட்சாப் குழுக்கள் மூலம் பரவச் செய்கின்றனர். இந்த தகவல் ஒருவழியாக நாகை ஆட்சியருக்கு செல்ல உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்.
இது குறித்து வைத்தீஸ்வரன் கோயிலை சேர்ந்த சமுக ஆர்வளர் ஒருவர் கூறுகையில், "நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதோடு நாடி ஜோதிடத்திற்கும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகின்றனர். இரண்டையும் நம்பி வீதிக்கு வீதி புதிது புதிதாக எவ்வீத பாதுகாப்பும் இல்லாமல் தனியார் விடுதிகள் முளைத்து அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை பொதுவெளியில் விடுவதால், அந்த கழிவுநீர் வடிய வசதி இல்லாமல் தேங்கி கோயில் குளத்திலேயே கலக்கும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
பல இடங்களில் கழிவுநீர் குட்டையாக தேங்கி ஈக்கள், கொசுக்கள், உற்பத்தியாகி பல்வேறு உடல் உபாதைகளை, நோய்களை, ஏற்படுத்துகிறது. அரசு அதிகாரிகள் ஆய்வுக்காக வந்தாலும் இங்குள்ள லாட்ஜ்க்களின் உரிமையாளர்களும் மற்றும் ஆக்கிரிமித்து வைத்திருக்கும் போலியான சில ஜோதிட நிலையத்தினரும் பணம் கொடுத்து சரி செய்துவிடுகின்றனர்.
இதனால் அரசின் கவனம் வைத்தீஸ்வரன் கோயில் பக்கம் வரமறுக்கிறது. அதோடு வைத்தீஸ்வரன் கோயில் பாரம்பரியமிக்க தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது. ஆதீனம் வருமானத்தை மட்டுமே இலக்காக வைத்திருப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் மீது அவர் அக்கறை காட்டுவதில்லை. கோயிலை சுற்றி பொதுசுகாதார வசதிகள் கூட கிடையாது, குடிதண்ணீர் வசதி கிடையாது, எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. கோடிக்கணக்கில் வருமானம் வந்தாலும் ஆதீன நிர்வாகம் எதற்கெடுத்தாலும் அரசை மட்டுமே நம்பி இருப்பதால் பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர்" என்றார்.