தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்மாநிலத்தில் பணிபுரிந்த புலம் பெயர்ந்த வடபுலத்து தொழிலாளர்கள் கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட இன்னல்களால் தங்களின் மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்வதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். இதில் முக்கிய காரணம் உணவு.
நேற்று முன்தினம் தமிழகத்திலிருந்து, கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கொல்லத்தில் மாடுகளை இறக்கிவிட்டு தமிழகத்திற்குத் திரும்பி வந்தது. அந்த லாரியில் கேரளாவின் எர்ணாகுளத்தில் கூலி வேலையிலிருந்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 7 பேர் லாரியின் பின்புறத்தில் மறைந்து தமிழகத்திற்குள் வர முயன்றனர். அது சமயம் கேரளாவின் எல்லைப் பகுதியான ஆரியங்காவில், கொல்லம் மாவட்ட ரூரல் எஸ்.பி.யான ஹரி சங்கரின் தனிப்படையினர் லாரியை சோதனை நடத்தியதில் தொழிலாளர்கள் மறைந்திருந்தது தெரிய வந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்ததில், கேரளாவில் பணிபுரிந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழகம் வந்து சட்டீஸ்கர் செல்ல முயன்றது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 7 பேரும் உடனடியாக கேரள எல்லையிலுள்ள சோதனை சாவடி அருகே அமைக்கப்பட்ட கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சோகமும், வேதனையும் தொடர் நிகழ்வாகிக் கொண்டேதான் இருக்கிறது.