சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அண்மையில் இளைஞர்கள் சிலர் சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், சமூக வலைத்தளத்தின் வாயிலாக இளைஞர்கள் மன்னிப்பு கேட்டிருந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கபாலீஸ்வரர் கோவில் வாசலில் மர்ம நபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆறாம் தேதி கோவிலுக்கு வந்த நபர் ஒருவர் கோவில் ராஜகோபுர பிரதான வாசலிலேயே தீ மூட்டத் தொடங்கினார். கோவிலுக்காக இரவு நேரக் காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனப் பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாகக் கோவில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி விசாரித்த பொழுது, அவருடைய பெயர் தீனதயாளன் என்பதும் கொசுத் தொல்லைக்காக தீ வைத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் விசாரணையில், செருப்புகளை ஒன்றாகச் சேர்த்து பெட்ரோல் ஊற்றி அந்த நபர் தீயிட்டதும் தெரியவந்துள்ளது.