கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எறையூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி, இவரது மனைவி மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்தப் பெண், அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. மாயா குடும்பத்தினர் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென அதேகிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையின் கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பாளராக இருக்கும் சூசைநாதன் என்பவரிடம் சென்றுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சூசைநாதன், சின்னத்தம்பியை அழைத்து பஞ்சாயத்து பேசியுள்ளார். அப்பொழுது சூசைநாதனுக்கும் சின்னதம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சமரசம் பேசிய சூசைநாதன் சின்னத்தம்பியை, மனைவியை வைத்து குடும்பம் நடத்து தெரியவில்லை எனத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதோடு, சின்னதம்பியை சூசைநாதன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பஞ்சாயத்து பேசிய சூசைநாதன் பேசிய பேச்சுகள் சின்னதம்பியை மனமுடைய செய்துள்ளது, மனைவியால் தனக்கு அவமானமாகிவிட்டதாக மன சஞ்சலத்தில் இருந்துள்ளார் சின்னதம்பி.
இதனால் ஆத்திரம் அடைந்த சின்னதம்பி திங்கள் கிழமை அதிகாலை சுமார் 2.45 மணியளவில் சூசைநாதனின் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார் சின்னதம்பி. வீட்டின் வெளியே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சூசைநாதன் மீது சின்னத்தம்பி தான் கொண்டுவந்திருந்த பெட்ரோலை ஊற்றியவர் சூசை நாதன் கண் விழித்து சுதாரிக்கும் முன்பே, தீ குச்சியை உரசி வீசியுள்ளார்.
சூசைநாதன் உடலில் தீ பற்றி எரிய துவங்கியுள்ளது, அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்து பாதிக்கப்பட்ட சூசைநாதன் உடனடியாக சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சூசைநாதன் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூசைநாதன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சின்ன தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சூசைநாதன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறையூர் கிராமத்தில் கிருத்துவ தேவாலயம் உள்ளது தேவாலயத்தில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் தேர் திருவிழாவில் சமூக ரீதியான பிரச்சனைகள் தொடர்ந்து பலமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிருத்துவ தேவாலயம் பகுதி மக்கள் மற்றும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் தேர் பவனி வருதல் குறித்து சாதி ரீதியான கலவரம் நடந்தது.
இதில் அப்போது எஸ்பியாக இருந்த அமுல்ராஜ் தலைமையில் துப்பாக்கி சூடு நடைபெற்று பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரச்சனையில் சூசை தலையிட்டு நீதிமன்றம் வரை சென்று பட்டியலின மக்கள் சாமி வழி படுவதற்கான உரிமையை மீட்டு சமூக ஆர்வலராக செயல்படுகிறார். இதைப் பிடிக்காத ஒரு சில நபர்கள் அவர் மீது திட்டமிட்டு இதுபோன்ற தாக்குதல் நடத்த உதவியிருக்கலாம் என அவரது உறவினர்கள் மற்றும் விசிக கட்சியினர் இடையே சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.