ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒரிச்சேரி புதூர் பகுதியில் ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. 10ந் தேதி காலை வழக்கம்போல் கோவிலை திறக்க சென்ற பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து கோவில் நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் கோவில் நிர்வாகிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு தடயங்களைச் சேகரித்தனர்.
இதற்கிடையே அதேபகுதியில் உள்ள சின்ன காளியம்மன் கோவில், மற்றும் ஒரிசேரிப் பகுதியில் அமைந்துள்ள இந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பூட்டு மற்றும் உண்டியல் ஆகியவை உடைக்கப்பட்டிருப்பது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்துக்கு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அருகிலுள்ள விவசாய தோட்டத்தில் கரும்பு பயிர்களுக்கு மத்தியில் திருடர்கள் பயன்படுத்திய ஸ்க்ரூட்ரைவர் உள்ளிட்டவை கிடப்பதாகப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அவற்றைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து மூன்று கோவில்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்தும், அதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.