அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். சுமார் 10- க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அவரது சகோதரர் வீட்டிலும் சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு நெருக்கமானவர்களின் 15 வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் 50- க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றன.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி். வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வேலுமணி மீது தொடர்ந்து புகார் வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவை மாநகராட்சி திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தில் ரூபாய் 346 கோடி ஊழல் செய்துள்ளதாகப் புகார் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சென்னையில் உள்ள சட்டமன்ற விடுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. கந்தசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் வரும் சோதனை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆகியவைக் குறித்து முதலமைச்சரிடம் டி.ஜி.பி. ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.