கோவை மதுக்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 திருடர்களை அப்பகுதி மக்கள் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை சுந்தராபுரம் - மதுக்கரை சாலை குரும்பபாளையம் அருகே உள்ள மேகா சிட்டி குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம், மதுக்கரையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் மெக சிட்டி குடியிருப்பில் வீடுகட்டி உள்ள நிலையில் தற்போது மதுக்கரையில் உள்ள நிறுவன குடியிருப்பில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 2 மணியளவில் ஆறுமுகம் வீட்டில் இருந்து சத்தம் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த குடியிருப்பை சேர்ந்தவர்கள் டார்ச் லைட் அடித்து வீட்டிற்குள் பார்த்தபோது வீட்டில் மூன்று நபர்கள் இருந்துள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மூவரையும் பிடிக்க முயன்றனர்.
இரண்டு பேர் பிடிப்பட்ட நிலையில் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றார். மேலும் அவர்கள் மூவரும் அங்கு கொள்ளையடிக்க வந்ததும் அதற்கான வெல்டிங் மெசின், கட்டிங் இயந்திரம் அனைத்தும் எடுத்து வந்தது தெரியவந்தது. அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த மதுக்கரை போலிசார் சென்று இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் மேலும் பலர் இந்த தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர்களை தேடி தனிப்படை போலிசார் விரைந்துள்ளனர். இப்பகுதியில் மூன்றாவது முறை திருடர்கள் புகுந்துள்ளனர். அடிக்கடி போலிசார் இங்கு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.