திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜிக்கு 41 கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் கரூரில் மாவட்ட திமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கே.சி. பழனிசாமி, நன்னியூர் ராஜேந்திரன், ம.சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 25000 பேர் கலந்து கொண்ட இந்த செயல் வீரர்கள் கூட்டத்தால் கரூர் திமுகவின் உற்சாகத்தில் கொண்டாடினார்கள்.
கரூர் மாவட்ட திமுக அலுவலகமான அறிவாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில்பாலாஜி கரூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் அவர் செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவராகவும், தொண்டர்களை அரவணைத்து செல்லும் தலைவராகவும் மு.க.ஸ்டாலின் திகழ்வதால் அவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தி.மு.க.வில் இணைந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன். தற்போது கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இல்லை. ஆனால் அதற்கு மாற்றாக தமிழக மக்களின் உரிமையை மீட்க மத்திய அரசினை துணிச்சலுடன் எதிர்த்து போராடும் ஆளுமை மிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பது நமக்கு மிகப்பெரிய பலம் ஆகும். கரூர் பாராளுமன்ற தொகுதியில் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றுவதில் திருப்திகரமான செயல்பாடு இல்லை.
தற்போது 21 சட்டமன்ற தொகுதிக்கான இடங்கள் காலியாக இருக்கின்றன. வருகிற பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து, அந்த தொகுதிகளுக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. இந்த 21 தொகுதிகள் போக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான வழக்கில் இன்னும் 11 தொகுதிகள் காலியாக போகின்றன. இந்த இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் மு.க.ஸ்டாலின் அமருவார். அதிலும் அரவக்குறிச்சி தொகுதியில் தலைமை கழகம் யாரை வேட்பாளராக நியமிக்கிறதோ... அவருடன் ஒருங்கிணைந்து உழைப்போம். கரூர் தி.மு.க. தொண்டர்களின் குடும்பத்தில் ஒருவனாக இருந்து நான் உழைப்பேன். இனி கரூர் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை என நிரூபித்து காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதுவரையில் அரசில்கட்சிகள் எதுவும் பார்த்திராத செயல் வீரர்கள் கூட்டம் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் நடந்ததில்லை என்ற அளவில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்த வளாகத்திலேயே பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு ஒரு பந்தலில் 5 ஆயிரம் பேர் அமரவும், மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியை காண பிரமாண்ட எல்சிடி டிவிக்கள் வசதியும் செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட 25,000 பேருக்கும் பல்சுவை உணவு வழங்கப்பட்டது.