திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணுவுக்கும், திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த பாரதிய ஜனதா மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் என்பருக்கும் வாக்குவாதம் நடந்ததில், அய்யாக்கண்ணு தகாத வார்த்தை பேசியதாகவும், இதனால் அய்யாக்கண்ணுவை நெல்லையம்மாள் கன்னத்தில் அறைந்ததாகவும் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியானது.
நடந்தது என்ன என்று அய்யாக்கண்ணுவை தொடர்பு கொண்டோம். அப்போது அவர் கூறியதாவது,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை 100 நாள் பணத்தை தொடங்கி நடத்தி வருகிறோம். திருச்செந்தூருக்கு சென்றோம். அங்கு முருகன் கோவிலுக்கு சென்று, மோடி அய்யா நல்லவர்தான், அவருக்கு நல்ல எண்ணத்தை கொடு முருகா என வேண்டிக்கொண்டு வெளியே வந்து பயணத்திற்கான துண்டு பிரசுரங்களை கடற்கரையோரம் நின்றிருந்தவர்களிடம் விநியோகித்தோம்.
அப்போது திடீரென ஒரு பெண் ஓடி வந்து, அய்யாக்கண்ணு ஒரு ப்ரோடு, அவன்கிட்ட நோட்டீஸ் வாங்காதீங்கன்னு தடுத்தார். நான் உடனே, எதுக்கும்மா என்னை ப்ராடுன்னு சொல்றேன்னு கேட்டேன். உடனே என் கன்னத்தில் அந்த பெண் அறைந்தார். உடனே கூட இருந்தவர்கள் கத்தினார்கள். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் ஏன் என்ன என்று கூடினர். வயதானவரை அடிக்கலாமா என அந்த பெண்ணை அனைவரும் திட்டினர். வேண்டுமென்றால் போலீசில் புகார் கொடுங்கள். எங்கள் பயணத்தை தடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டோம்.
சம்பவம் நடந்த இடத்தில் நீங்கள் தகாத வார்த்தையால் திட்டியதாக வீடியோ ஒன்று வாட்ஸ் அப்களில் பரவுகிறதே? எச்.ராஜா உங்களை கைது செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளாரே?
அந்தப் பெண்ணை நான் திட்டவில்லை. வீடியோவை நன்றாக பாருங்கள். அது என்னுடைய குரல் அல்ல. அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் திட்டுகின்றனர். இந்த வீடியோ வெளியானதில் இருந்து எனக்கு நிறைய பேர் போன் செய்து தகாத வார்த்தையில் என்னை திட்டுகின்றனர். பிரச்சனை வேண்டாம் என்று எங்களை அந்த இடத்தில் இருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் புகார் அளித்துள்ளனர். நாங்களும் புகார் அளிக்க உள்ளோம்.
எச்.ராஜா என்ன வார்த்தையை பயன்படுத்தினாரோ அதே வார்த்தையைத்தான் இந்தப் பெண்ணும், அய்யாக்கண்ணு ப்ராடு என பயன்படுத்தினார். எச்.ராஜா, நாராயணன் ஆகியோருக்கு விவசாயிகள் என்றாலே பிடிக்காது. அவர்களின் தூண்டுதலில்தான் இந்த பெண் எங்களை தடுத்தார். இந்த பெண் ஒரு கருவி. அவ்வளவுதான். சாதாரண விவசாயிகளான எங்களை தடுக்கிறார்களே, இதேபோல் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய கட்சிகள் செய்தால் அவர்களை இவர்களால் தடுக்க முடியுமா என்றார்.
இதனிடையே விவசாயிகள் தள்ளி விட்டு தாக்கியதில் காயம் அடைந்ததாக நெல்லையம்மாள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோயிலில் நோட்டீஸ் விநியோகிக்கக்கூடாது என்று சொன்ன தன்னை அய்யாக்கண்ணு தகாத வார்த்தையில் திட்டியதாகவும், விவசாயிகள் தாக்கியதாகவும், அய்யாக்கண்ணு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் தெரிவித்துள்ளார்.