
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நூறு கோடிக்கும் மேல் ரகசிய கலெக்ஷனில் இறங்கியுள்ளதாகக் கூறப்படும் மெகா மோசடி புகார் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
கடந்த 9 ஆம் தேதி, தமிழ்நாடு பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் சார்பில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ‘சுவாசம்’ என்ற பெயரில் ப்ரமோட் செய்யப்பட்ட இந்த விழாவில் அதன் லோகோவே பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது. சுவாசம் எனும் சொல் முழுக்க முழுக்க காவி வண்ணத்தில் காட்சியளிக்க, சுவாசம் என்பதன் கடைசி எழுத்தான ‘ம்’ க்கு மேல் புள்ளிக்கு பதிலாக தாமரை வடிவிலான பூ ஒன்று மலர்ந்திருந்தது. இதைவிட ஹைலைட்டான சமாச்சாரம் ஒன்று இதில் இருக்கிறது.
சுவாசம் என்ற சொல்லின் சு-வுக்கு முன், மோடி ஒரு பக்கமும் அண்ணாமலை ஒரு பக்கமும் பார்த்தபடி காட்சியளிக்கின்றனர். அதாவது, மோடி வலப்பக்கம் பார்ப்பது போலவும் அண்ணாமலை இடப்பக்கம் பார்ப்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை குறியீடாக இருக்கலாமோ என்னவோ...? மேலும் இந்த சுவாசம் என்ற பெயரில் நடைபெற்ற மரம் நடும் விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. பாலவாக்கம் ஹை-ஸ்கூலுக்கு அருகில் நடைபெற்ற இந்த விழாவில், அமர்பிரசாத் ரெட்டி உட்பட பாஜகவினர் பலரும் பங்கேற்றிருந்தனர். இந்த விழாவை அடிப்படையாக வைத்துக்கொண்டு நடக்கப்போவதாகக் கூறப்படும் கோல்மால் தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.
ஈசிஆர் ரோட்டில், பத்து லட்சம் மரக்கன்றுகளை நடவேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதை பாராட்டும் கமலாலயவாசிகள், இந்த சுவாசம் என்பதே அண்ணாமலையின் அறக்கட்டளைதான் எனக் காதைக் கடிகின்றனர். இந்த அறக்கட்டளை மூலம், ஒருவர் பெயரில் ஒரு மரம் வளர்க்க.., அவர்களிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் வசூலித்து வருவதாகவும் சொல்கின்றனர். மரம் நடும் இந்த கோல்மால் அமைப்புக்கு அண்ணாமலையின் மனைவி அகிலாதான் தலைவராம். இந்த அறக்கட்டளையின் செயலாளர், தொடர்ந்து மோசடிகளில் சிக்கி வரும் மற்றொரு பாஜக பிரமுகரான அமர்பிரசாத் ரெட்டியாம்.
கட்சியின் தேசிய தலைமையின் உத்தரவால் கர்நாடக தேர்தல் வேலைக்காகச் செல்ல இருக்கும் அண்ணாமலை, அங்கே போவதற்குள் முடிந்தவரை கலெக்ஷனை முடித்துக்கொண்டு போய்விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுகிறாராம். அமர்பிரசாத்துடன் சேர்ந்து, அண்ணாமலை தொடங்கியிருக்கும் இந்த மெகா மோசடித் திட்டத்தைக் கண்டு கொதித்துப் போன கட்சியின் சீனியர்கள், அவர்மீது டெல்லிக்கு புகார்களை அனுப்பி வருகிறார்களாம். கூடவே, அமர்பிரசாத் எப்படியெல்லாம் கடந்த காலங்களில் ஃபோர்ஜரி செய்து வாழ்ந்தார் என்றும் அரசியலை வைத்து பிழைக்கிறார் என்றும் ஆதாரத்தோடு, பாஜக ஆதரவு யூ-டியூபரான மரிதாஸ் தோலுரிக்கும் வீடியோ ஆதாரத்தையும் டெல்லிக்கு அனுப்பியுள்ளனராம். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத அண்ணாமலையும் அமர்பிரசாத்தும் கலக்கத்தில் இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.