மத்திய பாஜக அரசு தனது கொள்கை நிலைப்பாட்டை வீரியமாக செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தியுள்ளது. அடுத்து தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை செய்யவுள்ளது. இது இந்தியா முழுக்க தொடர்ந்து எதிர்ப்புகளை உண்டாக்கியுள்ளது.
பாஜக அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தமிழகத்தின் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது. இந்த நிலையில்தான் இன்று இந்திய பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதமாக வருகிற 16-ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் பேசுவதாகவும், அன்றைய தினம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் உரையை நேரடியாக கேட்பதற்கு பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என மத்திய அரசின் சுற்றறிக்கை மாநில அரசிற்கு வந்துள்ளது.
இந்த அறிக்கையை மாநில அரசும் ஒவ்வொரு கல்வித்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை. குறிப்பாக 16 ஆம் தேதி உழவர் திருநாள். இந்த நிலையில் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது மிகப்பெரிய ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் கல்வித்துறை அமைச்சர் வரை, அந்த நாள் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கட்சியினர் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய போது, அவர்,
இந்த அறிவிப்பு எல்லாம் சரியாக படவில்லை. எதற்காக இந்த பாஜக அரசு இப்படி தொடர்ந்து செய்கிறது என்று தெரியவில்லை. நாமும் இந்த ஆட்சிக்கு எவ்வளவுதூரம் பணிந்து போகிறோம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் இந்தியா முழுக்க பற்றி எரியும் போது கூட தமிழக அரசின் சார்பில் நாம் ஆதரவாக வாக்களித்ததால் தான் அந்த மசோதாவே நிறைவேறியது.
இதுவெல்லாம் பாஜக அரசிற்கு தெரியும். இந்நிலையில் திடீரென்று இப்பொழுது பிரதமர் மோடி உரையாற்றுகிறார் அதை கேளுங்கள் என்று பள்ளிக் குழந்தைகளை பொங்கல் நாளில் அவர்களை வரவைத்து கேட்க வைப்பது என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லாத ஒன்று.
இவர்களுடைய செயல்பாடுகள் மிகப்பெரிய தலைவலியை நமக்கு ஏற்படுத்தி உள்ளது. இதை திமுக உட்பட மற்ற கட்சிகள் அரசியல் ரீதியாக எதிர்க்கிறது என்றாலும் நாம் எதையும் பேச முடியாத சூழலில் இருக்கிறோம். ஆனால் ஜனவரி 16 ஆம் தேதி அதற்கு முந்திய நாள் தைப்பொங்கல் தமிழர் திருநாள், அதைத்தொடர்ந்து உழவர் திருநாள் இவையெல்லாம் தமிழகத்தினுடைய சிறப்பு நாளாக இருக்கிறது.
இதை தெரிந்து கொண்டே அந்த நாளில் பிரதமர் உரையாற்றுகிறார். நீங்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று அழைத்து வரச் சொல்வது எந்த விதத்தில் நியாயமானது. இதை தமிழக பாஜக கூட அவருக்கு தெரியப்படுத்தவில்லை என்பது ஒரு வேதனையான விஷயம். அதேபோல் தொடர்ந்து இந்த மாதிரியான நிலைகளை அவர்கள் தெரிவிப்பது மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது என அவர் கட்சிக்காரர்களிடம் கலந்துகொண்டாராம்.
இதுபற்றி அதிமுகவினர் நம்மிடம் கூறும்பொழுது, நீண்ட நாட்களாக இந்த ஆட்சியை கொண்டு போவதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தங்களுக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு போகிறார்கள். ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் எந்த பிரச்சனையும் செய்யாமல் எம்ஜிஆருக்காக, ஜெயலலிதாவிற்காக விசுவாசமாக நடந்து வருகிறார். இன்று அவர் எங்களிடம் பேசியது அவரது, மனக்குமுறலை தெரிவித்தது எங்களுக்கு உண்மையிலேயே வேதனை அளிப்பதாக இருந்தது என்றனர்.