"வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூபாயைக் கொடுத்திடுங்க. அதிலும் ஆட்டையப் போட்டு மிச்ச இருக்கின்ற நாட்களை நீங்களே அழிச்சிடாதீங்க" என கட்சி நிர்வாகிகளிடம் கடுங்கோபத்தில் ருத்ர தாண்டவமே ஆடியிருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்.
மக்கள் மனநிலை, அரசியல் சூழ்நிலை மற்றும் கருத்துக்கணிப்புகள் தங்களுக்கு எதிராக இருப்பதை தெளிவாக புரிந்துக் கொண்ட ஆளும் அதிமுகவினர், தாங்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க குறைந்த எண்ணிக்கையிலாவது சட்டமன்றத் தொகுதிகள் கைவசம் வேண்டுமென களமிறங்கி பணத்தை வாரியிறைத்து வருகின்றனர். அதில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை தனித் தொகுதியும் ஒன்று. இங்கு ஆரம்பத்தில் மிக அமைதியாக தேர்தல் பணி செய்து வந்த அதிமுகவினர் மத்தியில் அமைச்சர்கள் பாஸ்கரன் அம்பலம், செங்கோட்டையன் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் முற்றுகையிட தேர்தல் பணியோ மிகுந்த சுறுசுறுப்பானது.
இதனிடையே சனிக்கிழமையன்று வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா துவங்கப்பட்டிருக்க, "என்னுடைய பகுதிக்கு பணம் வரலை, அவருடைய பகுதிக்கு பணம் வரலை" என புகார்கள் அமைச்சர் பெருமக்களுக்கு எட்டியிருக்கின்றது. அனைத்து நிர்வாகிகளையும் அழைத்த அமைச்சர் செங்கோட்டையன், "இதோ பாருங்க, இது நாம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கப் போறோமா? இல்லை வெளியேறப் போறோமாங்கிற கௌரவ பிரச்சனை. இதில் ஆட்டையப் போடலாமா? அனைவருக்கும் பணம் சென்றாக வேண்டும். இல்லையெனில்" என ருத்ர தாண்டவமே ஆட கப்சிப் ஆகினர் அங்குள்ள நிர்வாகிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.