புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் உள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க கிராமம் கொடும்பாளூர். பழைய வரலாற்றுக் காலத்தில் தொடர்புடைய பொத்தப்பட்டி கிராமத்தில் விருத்தாச்சலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் "பன்னிருத் திருமுறை செப்பேட்டுத் திருக்கோயில்" கருங்கல்லால் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் செப்பேட்டுத் திருக்கோயில் என்று கூறப்படுவதால் அதனைப் பற்றி அறிய பொத்தப்பட்டி கிராமத்தில் கோயில் திருப்பணிகள் நடக்கும் இடத்திற்குச் சென்றோம்.
திருப்பணிகளைக் கண்காணித்து வரும் அறக்கட்டளை நிறுவனர் அ.சங்கரய்யா நம்மிடம், “விருத்தாச்சலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் நாயன்மார்களுக்கு கோயில்கள் கட்டி எழுப்பி வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் 12 திருமுறைகளுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் கோயில் கட்ட முடிவெடுத்து பொத்தப்பட்டி கிராமத்தில் நிலம் வாங்கி கருங்கல்லால் கோயில் கட்டி வருகிறோம். இதில் திருமுறைகளுக்கு உதவிய மன்னர் ராஜராஜசோழன் காளிங்கராயர், பாடியவர் சிலைகளும், திருமுறைகளும் வடிக்கப்படுவதுடன் திருப்பணிக்கு உதவியோர்களின் சிலைகளும் வடிக்கப்படுகிறது. எங்கே பார்த்தாலும் நம் பழைய இசைக்கருவிகள் புடைப்புச் சிற்பங்களும், திருமுறை வாசகங்களும் இடம் பெறுகிறது.
அதைவிட சிறப்பு கோயில் கருவறையில் இதுவரை சிலைகள் வைக்கப்படும். ஆனால் இங்கே 12 திருமுறைகளையும் 5 டன் செம்பு பட்டயத்தில் திருமுறைப் பாடல்களை அச்சிட்டு 165 புத்தகங்களாக்கி கருவறையில் லிங்கம் வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு லிங்கம் போன்ற அமைப்பில் கவசம் அணிவிக்கப்பட உள்ளது. இந்தச் செம்பு திருமுறைப் புத்தகங்களை ஆனி திருமஞ்சனம், ஆருத்ர தரிசனம் ஆகிய இரு நாட்களில் மட்டும் வெளியில் எடுத்து படிக்க கொடுக்கப்படும். ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்க 165 இருக்கைகள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 165 பேரும் பாட நிரந்தர மண்டபமும் தயாராகிறது. இதே ஊரில் செப்பு பட்டயத்தில் திருமுறை பாடல்கள் அச்சாக்கப்பணிகளும் நடந்து வருகிறது.
உலகிலேயே பன்னிருத் திருமுறை செப்புப் புத்தகத்தால் ஆன கோயில் இது மட்டுமே இருக்கும். இந்தக் கோயிலும் வரலாற்றில் பேசப்படும். இதற்கான திருப்பணி நன்கொடைகள் கிடைத்தால் இன்னும் விரைவாக பணிகள் முடிந்து திருக்குட நனனீராட்டு பெருவிழா நடத்திவிடலாம்" என்றார். திருமுறை புத்தகங்களே மூலவராக இருப்பது தமிழுக்கே உரிய சிறப்பு என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.