நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களை உள்ள நிலையில் நாகை தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் நாகை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆழியூர், சிக்கல் அந்தனப்பேட்டை, மஞ்சக்கொல்லை, புத்தூர் , பொரவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்வதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் வை.செல்வராஜ் செல்லுமிடமெல்லாம் கிராமிய பாடல்களை பாடி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வருகிறார். சிக்கல் பகுதியில் வாக்கு கேட்டவர் வாக்காளர்களுக்கு மத்தியில் கொலுசு கடை ஓரத்திலே கொலுசு ஒன்னாங்க.., ஏய்.. ஆக்காட்டி, ஆக்காட்டி பாடல்களை பாடி அசத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் கிராமப்புற பகுதிகளில் கிராமிய பாடல்களை பாடி வாக்கு கேட்பது பெண் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.