Skip to main content

“பாதிக்கப்பட்ட மக்களே போராட வேண்டிய நிலை ஏற்படும்” - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Selvaperunthagai warning for Afflicted people will have to fight

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த 18வது மக்களவைத் தேர்தல் கடந்த 1 ஆம் (01.06.2024) மாலையுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று (03.06.2024) நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் உள்ள 1228 சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி, 5 முதல் 10 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயணக் கட்டணம் ரூபாய் 5 முதல் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 

Selvaperunthagai warning for Afflicted people will have to fight

2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில், ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்ததாக அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை எழுப்பின. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு சி.ஏ.ஜி. தெரிவித்த முறைகேடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்திலுள்ள 36 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அப்படி திரும்பப் பெறவில்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களே அந்தந்த சுங்கச்சாவடிகளில் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். 

சார்ந்த செய்திகள்