தியேட்டரில் பிளாஸ்டிக் முட்டைப் பப்ஸ் விற்பனையா? உணவுப்பிரிவிடம் புகார்
நெல்லை தியேட்டர் ஒன்றில் பிளாஸ்டிக் முட்டைப் பப்ஸ் விற்பனை தொடர்பாகக் கிளம்பிய சர்ச்சை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையின் பேட்டையிலுள்ள மயிலப்புரம் பேச்சிமுத்து மருந்து விற்பனை பிரநிதி. இவர் தன் மனைவியுடன் நெல்லையிலுள்ள தியேட்டர் ஒன்றிற்குப் படம் பார்க்கப் போயிருக்கிறார். படத்தின் இடைவேளையின் போது அங்குள்ள கேன்டீனில் தம்பதியர் முட்டைப் பப்ஸ் வாங்கிச் சாப்பி்ட்டுள்ளனர். அப்போது பப்ஸில் சிறிய அளவு வெள்ளைத்தோடு இருப்பதைப் பார்த்த பேச்சிமுத்து கடையில் முறையிட்டிருக்கிறார். பாளை மார்க்கெட் பகுதியிலுள்ள பேக்கிரியில் மொத்தமாகத் தயார் செய்யப்பட்ட பப்ஸ்கள் தான் வாங்கி விற்பனை செய்யப்படுகிறது என்றிருக்கிறார்கள் கேன்டீனைச் சேர்ந்தவர்கள்.
அதன் பின் பப்ஸ் முட்டைத் தோட்டை பேச்சிமுத்து எரித்து சோதனை செய்த போது அது மெழுகு போல் உருகி எரிந்திருக்கிறது. அதனையடுத்து பேச்சிமுத்து அது பற்றி நெல்லை ஜங்ஷன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தபோது, அவர்களோ பிரச்சினை குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர். அதன் பிறகே உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் கலெக்டரிடம் புகார் செய்திருக்கிறார்.
இதனிடையே பாளையிலுள்ள சம்பந்தப்பட்ட கடையில் பப்ஸ் பற்றிக் கேட்டதற்கு, பப்ஸ் மொத்தமாக தயார் செய்து விற்பனை செய்யப்பட்டது. அவைகள் தற்போது ஸ்டாக் இல்லை. என்றவர்கள். மேலும் தியேட்டருக்கு எங்கள் கடை மட்டுமல்லாமல் வேறு ஒரு பேக்கரியிலிருந்தும் வருகிறது. அது தங்களுக்குத் தெரியாது என்கிறார்கள்.
பிளாஸ்டிக் முட்டை வி்ற்பனை பற்றிய தகவல்கள் அங்கிங்கும் கிளம்பிய போதிலும், பிளாஸ்டிக் முட்டைப் பப்ஸ் விஷயத்தை பிரச்சினை கிளப்பிய இடத்திலேயே வி்ட்டு விடாமல் சமூக அக்கறையுடன் பேச்சிமுத்து அதுப்பற்றிய புகாரை அதிகாரிகளிடம் கொடுத்தும், அவர்களால் பல துறைகளுக்கும் அவர் அலைக்கழிக்கப்பட்டும் கூட, துவண்டு போகாமல் உரிய துறை அதிகாரிகளிடம் புகார் செய்து விசராணைக்குக் கொண்டு வந்த அவரது போராட்டம், பாராட்டத்தக்கது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-ப.இராம்குமார்