ஈரோடு பெருந்துறை அருகே கஞ்சா கலந்த சாக்லேட் விற்ற தந்தை, மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கஞ்சா கலந்த சாக்லேட் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் குன்னத்தூர் ரோடு, செல்லியம்மன் கோவில் எதிரே உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா கலந்த சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் ராம் (50), அவரது மகன் சங்கர் (20) ஆகியோரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா கலந்த சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் மற்ற கடைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.