சிதம்பரம் ஞானபிரகாசம் வட குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் கரந்தை ஜெயகாந்தம் துறைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை சார்பில் சேக்கிழார் குருபூஜை விழா மற்றும் நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவில் சேக்கிழார் அறக்கட்டளையின் துணைத்தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் அருள்மொழிச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.
முன்னதாக நம்பியாண்டார் நம்பிகள் வாழ்வும் வாக்கும் ரமண சர்மா தலைமையில் சொற்பொழிவு, ஓதுவார் சந்திரசேகர், வயலில் சரவணன், மிருதங்கம் நடராஜ ரத்தின தீட்சிதர் ஆகியோர் கலந்து கொண்ட திருமுறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சேக்கிழார் விழா பேருரை ஆன்மீக சொற்பொழிவாளர் மீனாட்சி சுந்தரம் பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் என்ற தலைப்பில் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக 2024 ஆம் ஆண்டு சேக்கிழார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திருப்பதி கலந்து கொண்டு தமிழ் செம்மல் விருதை ஆன்மீக சொற்பொழிவாளர் மதுரை சோ.சோ. மீனாட்சி சுந்தரத்திற்கும், சிவாச்சாரியார் செம்மல் விருதை ந. சிவஞானசம்பந்த சிவாச்சியாருக்கும், திருமுறை இசை செம்மல் விருதை சிவ.சந்திரசேகர் ஓதுவாருக்கும் வழங்கி விழா குறித்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் சிதம்பரம் நகரின் முக்கிய பிரமுகர்கள், தில்லை தமிழ் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், சேக்கிழார் அறகட்டளை குழுவினர். ஆறுமுக நாவலர் பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.