பல வருடங்களுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை காலாவதி தேதியை அழித்து புதிய தேதி அச்சிட்டு விற்பனை செய்ய வைத்திருந்த 1500 பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வேளாண்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள அதிர்ச்சி சம்பவம் விவசாயிகளை கலக்கமடைய வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஒரு தென்னந்தோப்பு, ஒரு வீடு, ஒரு கடை என பல இடங்களில் காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக வாங்கிவந்து, காலாவதி தேதியை அழித்து, புதிய தேதியை அச்சிட்டு உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் உள்ள வேளாண் பூச்சி மருந்துக்கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் கும்பல் செயல்படுவதாக, வேளாண்துறை மாவட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் நேரில் புகார் சொல்லியும் கண்டுகொள்ளாத நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் ரகசிய புகார் அளித்ததையடுத்து, மாவட்ட நிர்வாகம் ஆய்வுக்கு உத்தரவிட்டு 10 நாட்களுக்கு பிறகு நடந்த சோதனையில் தான், இத்தனை காலாவதியான பூச்சி மருந்து பாட்டில்களை வேளாண்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
செவ்வாய் கிழமை வேளாண் உதவி இயக்குநர்கள் திருவரங்குளம் வெற்றிவேல், அறந்தாங்கி பத்மபிரியா குழுவினர் கீரமங்கலம் தெற்கு எழுமாங்கொல்லை கிராமத்தில் உள்ள விவசாயி வேம்பங்குடி மாதவன் தென்னந்தோப்பில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பல வகையான பூச்சி மருந்துகளை கைப்பற்றிய நிலையில், இது தென்னை மரங்களுக்கு தெளிக்க வாங்கி வைத்திருப்பதாக விவசாயி மாதவன் கூறியதையடுத்து சுமார் 200 காலாவதியான மருந்துப் பாட்டில்களை அதிகாரிகள் கைப்பற்றி கீரமங்கலம் வேளாண்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
புதன் கிழமை காலை கீரமங்கலம் காந்திஜி சாலையில் உள்ள ஐயப்பன் என்பவரின் பூச்சிமருந்துக்கடையில் வேளாண் உதவி இயக்குநர் வெற்றிவேல் தலைமையிலான வேளாண் அலுவலர் குழுவினர் கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் முருகதாஸ், கீரமங்கலம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அருள்வேந்தன், போலீசார் முன்னிலையில் பூட்டியிருந்த கடையை திறந்து சோதனை செய்த போது, 2015 முதல் காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், காலாவதியாகாத தேதியுள்ள மருந்துகள், காலாவதியாகி டின்னர் வைத்து அழித்து புதிய காலாவதி தேதி அச்சிடப்பட்ட மருந்துகள் என பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் 1500 பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களையும், வேளாண்துறையில் விற்பனை செய்யும் விதை நெல், எள், உளுந்து பைகளும் கண்டறியப்பட்டது. மேலும் மருந்துப் பாட்டில்களில் காலாவதியான தேதி, விலை பட்டியலை அழிக்கும் டின்னர் (காலியான) பாட்டில்களும் அழிக்கப்பட்ட இடத்தில் புதிய தேதி, விலை அச்சிடும் கருப்பு மை பாட்டில் ஆகியவற்றை அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்தனர். காலாவதியான மருந்துகள் பற்றிய ஆய்வு நடத்தும் போது தரக்கட்டுப்பாடு வேளாண் உதவி இயக்குநர் மதியழகனும் வந்து ஆய்வு செய்து அதிர்ந்து போனார்.
மொத்தமாக அனைத்து மருந்து பாட்டில்களும் தரம் பிரித்து மருந்தின் பெயர், அளவு, விலை, காலாவதி தேதி, மருந்து நிறுவனத்தின் பெயர், எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்த வேளாண்துறை அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட மருந்து உள்ளிட்ட பொருட்களை அட்டைப்பெட்டிகள், சாக்குப் பைகளில் அடைத்து கீரமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்திற்கு கொண்டு சென்றனர்.
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலாவதியான சுமார் 1500 மருந்துப்பாட்டில்களை வேளாண்துறை அதிகாரி கைப்பற்றிய சம்பவம் வேகமாக பரவியதால், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். மேலும் அனைத்து மருந்துக்கடைகளிலும், அதிகாரிகள் ஆய்வு செய்து இது போன்ற காலாவதியான மருந்துகள் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறும் விவசாயிகள், சம்மந்தப்பட்ட பூச்சி மருந்து நிறுவனங்களும் ஆய்வு செய்து காலாவதியான மருந்துகளுக்கு புதிய தேதிகள் மாற்றி இருந்தால், நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.
வேளாண்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட மருந்துகள் பற்றிய விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கையாக கொடுத்த பிறகு, கைப்பற்றப்பட்ட மருந்து பாட்டில்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நீதிமன்றத்தில் காலாவதியான மருந்துகளையும், காலாவதி தேதி, விலை அழிக்கப்பட்டு புதிய தேதி, விலை அச்சிடப்பட்டதையும் தெளிவாக ஆவணப்படுத்தி ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.
ஒரே இடத்தில் இவ்வளவு காலாவதியான மருந்து பாட்டில்களை அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றிய சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.