
ஈரோடு மாவட்டம் பெருந்துறை குன்னத்தூர் சாலையில் ஆட்டோ ஸ்பேர்ஸ் தொழில் நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோட்டா ராம், கோட்டா ராம் என்பவருக்கு சொந்தமான குடோன் அதே பகுதியில் உள்ளது. இந்த குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் பெருந்துறை போலீசார் குடோனுக்கு சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடோனில் 1.5 டன் குட்கா, அதாவது 1500 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். 1.5 குட்காவை பறிமுதல் செய்த பெருந்துறை போலீசார் மோட்டாராம், கோட்டாராம் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், குடோனில் இருந்த ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர்