Skip to main content

ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் தமிழர் நிலத்தில் அறப்போர் வெடிக்கும்; சீமான் எச்சரிக்கை

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கெதிராகப் போராடியவர்களை அத்துமீறிக் கைது செய்வதா? ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் தமிழர் நிலத்தில் அறப்போர் வெடிக்கும் என  நாம் தமிழர் கட்சி  சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

"திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 494 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பினையும், கடும் கோபத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

Seeman warning

 

மத்தியில் ஆண்ட தேசியக் கட்சிகளின் பாராமுகத்தாலும், கர்நாடக அரசின் முரட்டுப் பிடிவாதத்தாலும் 30 ஆண்டுகளுக்கு மேலாகக் காவிரி நதிநீர் முற்றிலும் மறுக்கப்பட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கியக் காவிரிப்படுகை முழுக்க இன்றைக்குத் தரிசாக மாறிக்கிடக்கிறது. மெல்ல, மெல்ல அந்நிலம் வேளாண்மையைவிட்டு நகர்ந்து மாற்றுத் தொழிலை நோக்கிப்போய்க் கொண்டிருக்கிறது. இத்தகையச்சூழலில் அங்கு கஜா புயல் ஏற்படுத்தியப் பேரழிவு பத்தாண்டுகளுக்குப் பின்னால் அம்மண்ணின் மக்களை இழுத்துச் சென்றிருக்கிறதென்றால் அது மிகையல்ல.இவ்வாறு துயரமும், துன்பமும் கலந்த வாழ்வியலுக்கு மத்தியில் காவிரிப்படுகை மக்கள் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கிற தற்காலச் சூழலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது எதன்பொருட்டும் மன்னிக்கவே முடியாதப் பச்சைத்துரோகம்.

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைத்து அம்மண்ணையும், நீரையும், சூழலையும் முழுமையாக நாசப்படுத்திய, அதற்கெதிராக நடந்த அறவழிப்போராட்டத்தில் 14 உயிர்களை காவு வாங்கிய வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழகத்தின் இன்னொரு பகுதியில் நிலத்தையும், வளத்தையும் சுரண்டுவதற்கு அனுமதி அளிக்கிறார்களென்றால் இது மக்களின் உணர்வுகளைத் துளியும் மதிக்காத சர்வாதிகாரப்போக்காகும். ஒரு சனநாயக நாட்டிற்கான அழகு என்பது அம்மண்ணின் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, உரிமைக்குச் செவிசாய்ப்பதே. ஆனால், இங்கு மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களது ஒப்புதலின்றி வலுக்கட்டாயமாக நிலத்தைப் பறித்து வளத்தைச் சுரண்ட முற்படுகிறார்கள் என்பது கொடுமையானச் சர்வாதிகாரம்.

 

இம்மண்ணும், நீரும் நமக்கானதல்ல! நாளைய தலைமுறைக்கானது எனும் இயற்கையின் இயங்கியலை உட்செரித்துக் கொண்ட மக்கள் அவற்றிற்கு ஒரு பங்கம் விளையும்போது அதற்கெதிராய் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள் எனும் உலகநியதியின் பாற்பட்டு உலகம் முழுதும் நிகழும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் போலவே திருக்காரவாசல் மக்களும் தங்களது நிலமீட்புப் போரை முன்னெடுத்திருக்கிறார்கள். அவ்வாறு முன்னெடுத்தவர்களைக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலையை எட்டிய நாடுகளுக்கு மத்தியில் அறவழியில் போராடி விடுதலை பெற்ற நாடாகப் போற்றப்படும் இந்நாட்டில், அறவழியில் போராடும் மக்கள் கைது செய்யப்படுவது என்பது இந்நாட்டின் அடிப்படைச் சனநாயகக் கோட்பாடுகளுக்கே எதிரானது.

 

எண்ணெய் வளத்திலும், எரிகாற்று வளத்திலும் உள்நாட்டிலே தன்னிறைவு பெறத் துடிக்கும் இந்தியப் பேரரசு, இந்திய மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியிலும், நீர் தேவையிலும் தன்னிறைவு பெறுவதற்கு என்ன திட்டத்தை முன்வைத்திருக்கிறது எனும் எளிய கேள்விக்கு நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் என்ன பதிலுண்டு? உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்காற்றும் வேளாண்மையை அழித்துவிட்டு, வேளாண் நிலங்களைப் பிளந்து எரிகாற்று எடுத்துவிட்டு யாருக்கு வளர்ச்சியை அளிக்கப் போகிறார்கள்? புவி வெப்பமாதலைத் தடுக்கும்பொருட்டு பூமிக்கடியிலுள்ள வளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு மாற்று எரிபொருள் வளத்தை நோக்கி உலகம் முழுவதும் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசு மேற்கொள்ளும் இவ்வகை நடவடிக்கைகள் யாவும் இயற்கைக்கு எதிரானதில்லையா? இயற்கைக்கு ஒவ்வாத நடவடிக்கைகள் மேற்கொண்டு அதனைச் சிதைத்து அழிப்பது தான் இவர்கள் கூறும் வளர்ச்சியா? தேசப்பிதா காந்தியடிகளால் வேளாண் நாடு எனப் போற்றப்பட்ட இந்நாட்டில் வேளாண்மையை வளர்த்தெடுப்பதுதான் ஆகச் சிறந்த வளர்ச்சித் திட்டம் எனும் அறிவியல் உண்மை நாட்டை ஆளும் கார்ப்பரேட் மூளைகளுக்கு உரைக்காமல் போனது ஏனோ? எனும் தார்மீகக் கேள்விகள் மக்கள் மனங்களில் எழுகிறது

 

 

மத்தியில் ஆளும் பாஜக அரசானது, வளர்ச்சி எனும் ஒற்றைச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு இயற்கையைச் சீரழித்திடும் அபாயகரமான திட்டங்களைத் தொடர்ச்சியாகத் தமிழர் மண்ணில் திணித்து வருவதும், அதற்குத் தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசும் துணைபோய் கொண்டிருப்பதும் வரலாற்றுப் பெருந்துரோகம். இதற்கான எதிர்வினையை எதிர்காலத்தில் அவர்கள் பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆகவே, இனியாவது மண்ணின் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, மனச்சான்றின்படி திருக்காரவாசலில் கைதுசெய்யப்பட்டுள்ள மண்ணின் மக்களை எவ்வித வழக்குமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அந்நிலத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை எடுக்கிறத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் தைப்புரட்சி போல தமிழர் நிலத்தில் மீண்டுமொரு அறப்போர் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்."என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்