
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வது தி.மு.க.வினருக்கு கைவந்த கலை. விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்து சர்க்காரியா கமிஷனால் ஊழல்வாதிகள் என அடையாளம் காட்டப்பட்டவர்கள் தி.மு.க.வினர். மக்களுக்கு வழங்கப்படும் பாலில் கூட திருட்டு நடைபெறும் நிலையில் விடியா தி.மு.க. ஆட்சி உள்ளது. பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பாலின் அளவைக் குறைத்து தி.மு.க.வினர் ஆதாயம் தேடுகின்றனர்.
தினமும் 33 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. பால் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆண்டுக்கு ரூபாய் 800 கோடியை தி.மு.க.வினர் ஆதாயம் தேடுகின்றனர். கடலுக்கு நடுவே பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தான் பேனா நினைவுச்சின்னம் அமைக்க வேண்டுமா? சீமானுக்கு வாய் கொழுப்பு அதிகம், அதை அ.தி.மு.க.விடம் காட்டினால் சீமான் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துபவர்களை தி.மு.க. அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.