இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் இன்று (12-07-24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கமல்ஹாசனுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று இந்தியன் 2 திரைப்படத்துள்ளார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த படத்தை எல்லோரும் பார்த்து ஆதரவு தர வேண்டும். அப்பொழுது தான் இந்த மாதிரி சிறந்த படைப்புகள் தொடர்ந்து வரும். இந்த படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் கேடுகெட்டு புறையோடி அழுக்கு சமூகமாக இருக்கிற இந்தச் சமூகத்தை பழுது பார்க்கிற ஒரு கலையாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.
இந்த மாதிரி 100 படம் எடுத்தாலும் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க முடியாது. நாம் எல்லோரும் ஊழல், லஞ்சத்திற்கு எதிராக மாறினால் தான் இந்தச் சமூகம் மாறும். ஊழல், லஞ்சம் இருக்கிற வரை இந்தப் படத்திற்கான தேவை இருக்கத்தான் செய்யுது. நோய் இருக்கும் வரை மருந்து கொடுத்துதான் ஆக வேண்டும். தாயின் கருவறை முதல் கோவில் கருவறை வரை லஞ்சம், ஊழல் நிறைந்துள்ளது. கோவிலில் சிறப்புத் தரிசனம் உள்ளிட்டவற்றில் இருந்துதான் லஞ்சம், ஊழல் தொடங்குகிறது. 10 படம் எடுத்தாலும் லஞ்சம், ஊழல் ஒழியாது” என்று கூறினார்.