நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக திருச்சி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு போட்டியிட்ட துரை வைகோ வெற்றி பெற்ற நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இந்த எளியவன் துரை வைகோ பாடுபடுவேன் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை திருச்சி மட்டுமல்ல புதுவையும் உட்பட்ட 40 தொகுதிகளிலும் 100 விழுக்காடு வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றுள்ளோம்.
பாஜக அணி 18 விழுக்காடு வாக்குகள் வாங்கி இருக்கிறார்கள். பாஜக தனியாக நின்றிருந்தால் மூன்று விழுக்காடு வாக்குகள் தான் வாங்கி இருப்பார்கள். பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கிறது. அந்த கூட்டணி கட்சிகளின் வாக்கு எல்லாம் சேர்ந்து தான் 18 சதவிகிதம். தனியாக பாஜக நின்றிருந்தால் போன முறை வாங்கிய மூன்று சதவீதத்தை தாண்டி இருக்க முடியாது. எனவே பாஜகவினர் அவர்களே அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அரசியல் சித்தாந்தங்களில் வேறுபடலாம். ஆனால் சகோதரர் சீமானை பொறுத்த வரைக்கும் வேறுபட்ட கொள்கைகள் இருந்தாலும் தனியாக நின்று இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதை நாம் பாராட்ட செய்யதான் வேண்டும்'' என்றார்.