தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி ஊக்கமளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.
அப்போது, எட்டு மாவட்டம் அழிந்து போனது. என் தாய் நாட்டில் பாதி அழிந்துபோனது. இது ஒரு வளருகின்ற நாடு. ஒரு பேரிடர் நிகழ்ந்தால் நம் மக்களை மீட்க தேவையான ஒரு பேரிடர் குழு, மீட்புப் படை இருக்கிறதா என்றால் இல்லை. உலக நாடுகளில் எல்லா நாடுகளிலும் மீட்புக்குழு வைத்துள்ளது.
குரங்கனி காட்டுப்பகுதியில் 10 நாட்களாக தீப்பிடித்து எரிந்தது. ஒருவர் கூட காப்பாற்ற வரவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை காப்பாற்ற ஹெலிகாப்டரை அனுப்பிய நாடு, தீயிக்குள் கருகி கிடக்கிற எம்மக்களை காப்பாற்ற ஒரு ஹெலிகாப்படரை அனுப்பவில்லை. இந்த நாட்டின் மீது பற்று வர வேண்டும் என்று பேசுகிறார்கள். எப்படி வரும்?
தானே புயலில் செத்தவர்களை எட்டிப்பார்க்கவில்லை. வர்தா புயலில் செத்தவர்களை எட்டிப்பார்க்கவில்லை. கடைசியாக கஜா புயலில் வந்து நிற்கிறோம். யாரும் வந்து எட்டிப்பார்க்கவில்லை.
மூவாயிரம் கோடி ரூபாய்க்கு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்த என் தேசம், 350 கோடியை 8 மாவட்ட வேளாண்குடி மக்களுக்கு, எல்லாவற்றையும் இழந்து நிற்கதியாய் நிற்கின்ற எம்மக்களுக்கு இழப்பீடு தொகை, நிவாரணத் தொகை என ஒதுக்குகிறது.
எட்டு வழிச்சாலையை சேலத்தில் இருந்து சென்னைக்கு போடுவதற்கு காட்டிய அவசரம் என்ன? அதனை செயல்படுத்துவதற்கு காட்டிய தீவிரம் என்ன? அதனை தடுக்கப்போனவர்களை சிறைப்படுத்திய வேகம் என்ன? அதற்கு ஒதுக்கப்பட்டப் பணம் 10 ஆயிரம் கோடி. 8 மாவட்டம் நிர்வாணமாக அழிந்தபோனபோது, அதனை மீட்பதற்கு ஒதுக்கியப் பணம் 350 கோடி. வெறும் வார்த்தைத்தான், பணம் இன்னும் வரவில்லை.
8 மாவட்டங்கள் அழிந்து உறைந்த மனநிலையில் நிற்கிற மக்களை நாட்டின் பிரதம அமைச்சர் நரேந்திர மோடி நேரில் வந்து பார்த்து ஆறுதல் சொல்ல நேரம் இல்லை. பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு போகுவதற்கு நேரம் இருக்கிறது.
பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருப்பதாக ஒரு தம்பி எழுதுகிறான்... ''விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க பிரதமர் மோடி வருகிறார்'' என்று. அதற்கு கீழே இன்னொரு தம்பி போடுகிறான், ''ஒன்னும் அவசரம் இல்ல. அப்படியொன்னும் அவசரமில்ல. பிரியங்கா சோப்ராவுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆகியிருக்கு. பிரசவம் பாத்துட்டு வரலாமுன்னு எழுதியிருக்கிறான். இவ்வாறு பேசினார்.