Skip to main content

திருநங்கைகளுக்கு மகுடம் சூட்டிய விழா!

Published on 11/10/2018 | Edited on 11/10/2018

 

Social organization

 

சாதிக்க பிறந்த சமூக அமைப்பு நடத்தும் திருநங்கை ராணி தமிழகத்தின் தேடல் என்ற மாபெரும் நிகழ்வு சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்று வருகிறது.

 

இந்த போட்டியில் 13 திருநங்கைகள் அக்சரா, ஆஷிகா, அமீரா, அனீஷா, இனியா, மது, நபீஸா, நட்சத்திரா, ரேணுகா, ரேணுகா, ஸ்வேதா, யாழினி, சரினா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

 

இரண்டு சுற்றாக இந்த போட்டிகள் நடைப்பெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து திருநங்கைகளுக்கும் மகுடம் சூட்டி அழகு பார்க்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக  நடிகை கஸ்துரி, மலைக்கா, ப்ரியதர்ஷினி ராஜ்குமார், சுபிக்ஷா சோனியா, அம்பிகா பிரசாத், அனில் கோதரி, ஹரிஹரன் கொண்ட 7 பேர் நடுவர்களாக போடப்பட்டுள்ளார்கள்.

 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், திரைப்பட நடிகர், நடிகைகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியயாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

முன்னதாக, திருநங்கை என்ற பெயரை சூட்டி அவர்களுக்கென தனி வாரியத்தை அமைத்து, அந்த வாரியம் மூலமாக திருநங்கைகளுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைத்த கலைஞருக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.


நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.

 

 அதன் பின்னர், திருநங்கைகளுகாண பார்வை சமூகத்தின் பார்வையில் எவ்வாறு உள்ளது என்ற தலைப்பில் நாமக்கல்லைச் சேர்ந்த (திருநங்கை) ரேவதி நாடகம் ஒன்றை நடத்தி சிறப்பித்தார்.

 

திறமைவாய்ந்த கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள் போன்று திருநங்கைகளுக்கும் விருதுகள் கொடுத்து முன்னிலைப் படுத்த வேண்டும் என்று மருத்துவர் அமர் பிரசாத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக உணர்ச்சிகரமாக நாடகத்தை அரங்கேற்றிய நாமக்கல் ரேவதிக்கு (திருநங்கை) கலைமாமணி விருது வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

அதுமட்டுமின்றி திருநங்கைகளுக்காக முதன் முதலில் புத்தகம் எழுதி வெளியிட்டவர் ரேவதி (திருநங்கை) என்பது குறிப்பிடத்தக்கது. 

 

முதல் இடத்தை பிடித்தவர் நபீஸா சென்னையை சேர்ந்தவர். இரண்டாவது இடத்தை பெற்றவர் இனியா ஈரோட்டைச் சேர்ந்தவர். 3வது இடத்தை பிடித்தவர் மதுமிதா காரைக்குடியைச் சேர்ந்தவர். நடிகர் நகுல் அவர்களின் மனைவி அவர்களால் முதல் பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக ஆறுதல் பரிசு பெற்றவர் ரேணுகா தூத்துக்குடியை சேர்ந்தவர்.
 

Social organization

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு! 

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

மக்கள் பாதை முப்பெரும் விழா மூலம் நேர்மை நாயகர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சகாயம் ஐஏஎஸ், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, தமிழ் சினிமா இயக்குனர்கள் ராஜு முருகன், அமீர், தங்கர் பச்சன் மற்றும் நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும் போது, நான் இந்த சினிமா உலகில் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஒரு 40 வருட காலம் சினிமா உலகில் இருக்கிறேன். 

 

director



எனது படங்கள் மூலம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை கூறி வருகிறேன். மதவாதிகள் செய்கின்ற தவறுகள், எந்த மதவாதிகள் செய்கின்ற தவறாக இருந்தாலும், அரசியல்வாதிகள் செய்கின்ற தவறாக இருந்தாலும், அதிகாரிகள் செய்கின்ற தவறாக இருந்தாலும் என் படத்தின் மூலம் தவறை எடுத்து காட்டி அந்த ஊழல் அதிகாரிகளையும், அரசியவாதிகளையும் மாற்ற முயற்சி செய்துள்ளேன். ஆனால் தற்போது நினைக்கிறேன் அது முடியாத காரியம் என்று, மேலும் சரி செய்ய வேண்டியது இன்றைக்கு இருக்கும் இளைஞர்களை என்று கூறினார். நான் முதல் முறையாக சகாயம் அவர்களை வீட்டில் சந்திக்கும் போது சொன்னேன் நீங்கள் தான் ரியல் ஹீரோ. படத்தில் நடிப்பவர்கள் எல்லாம் பொம்மை ஹீரோக்கள் நீங்க தான் ரியல் ஹீரோ என்று தெரிவித்தேன். அதற்கு சகாயம் அவர்கள் நான் அப்படி எல்லாம் இல்லை, நான் ஒரு நேர்மையான அதிகாரி அவ்வளவு தான் என்று சகாயம் கூறினார்கள். 

 

meeting



தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், எந்த ஒரு அதிகாரியும் அப்படி கட்டிலை போட்டு சுடுகாட்டில் படுக்க முடியுமா? ஆனால் அதை சகாயம் செய்தார்கள். அதற்கு ஒரே காரணம் நேர்மை என்று கூறினார். படத்தில் ஒரு ஹீரோ 100 பேரை அடிப்பார்கள். கையில் ஆயுதம் வைத்து கொண்டு சண்டை போடுவார்கள். ஆனால் நேர்மை என்ற ஒரு ஆயுதத்தை வைத்து கொண்டு அந்த இடத்தில படுத்தவர். ஏன் தமிழகத்தை வழிநடத்தக் கூடாது என்று யோசித்தேன் என்று இயக்குனர் சந்திரசேகர் பேசினார்.


மேலும் இன்றைய இளைஞர்கள் லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக நெஞ்சை நிமித்தி நடக்க வேண்டும் என்று கூறினார். எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும் லஞ்சம் கொடுக்காமல் இருந்து பழகி பாருங்கள். அதை நடைமுறை படுத்துவது கஷ்டம் தான் இருந்தாலும் செய்து பாருங்கள் பின்பு நெஞ்சை நிமித்தி நடங்கள் இது தான் எனக்கு தோன்றுகிறது என்று கூறினார்.ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள் லஞ்சம் வாங்குபவர்களை குறை கூறாமல், லஞ்சம் கொடுக்காமல் இருந்து பாருங்கள் என்று கூறினார். மேலும் ஒரு தலைவன் வந்து பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் நினைக்கவில்லை. ஆனால் தொண்டர்கள் நினைத்தால் முடியும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

அந்த ஆனந்தக் கண்ணீருக்காகத்தான் எல்லாமே! - புன்னகையை மீட்டுத்தரும் இளம் டீம்!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

“சாக்ராபத்… சாக்ராபத்… என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் அவரிடமிருந்து வரவேயில்லை. அது பெயராகவோ, ஊராகவோ அல்லது அவருக்குத் தொடர்புடைய எதுவாகவோகூட இருந்திருக்கலாம். அதீத குழப்பத்திலும் வாய்ப்புகளைத் தேடினோம். விடை கிடைத்தது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருக்கும் ஷாகிராபாத்’தான் அது. அவரது பெயர் தப்ரீஷ் அகமது. பின்னர் அவரது குடும்பத்திற்கு தகவல்கொடுத்து, அவர்களின் முன்னிலையே தப்ரீஷ் தொலைந்துபோன காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டோம்” - என்று ஃபாரிஹா சுமன் சொல்வதை ஆர்வமும், ஆச்சர்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

 

fariha suman

ஃபாரிஹா சுமன்



ஃபாரிஹா சுமன், 23 வயது இளம்பெண். வேலூரைச் சேர்ந்தவர். சென்னை ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தில் முதுநிலை சமூகப்பணி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். சிறுவயதில் இருந்தே துடிப்பும், சமூக அக்கறையும் கொண்டவரான ஃபாரிஹா, நல்ல ஆதாயம் தரும் வாய்ப்புகள் பல கிடைத்தும், Aspiring Lives அறக்கட்டளையை தொடங்கி சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

manishkumar

மணீஷ்குமார்



அரசு மற்றும் தனியார்த் துறைகளில் மண்டிக்கிடக்கும் ஊழலைப் பொறுத்துக் கொள்ளாமல், லட்சக்கணக்கில் ஊதியம்கொடுத்த வேலைகள், செல்வச் செழிப்பான குடும்பம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்த அறக்கட்டளைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படுகிறார் பீஹாரைச் சேர்ந்த மணீஷ்குமார். நிறுவனராக ஃபாரிஹா சுமனும், நிர்வாகத் தலைமையாக மணீஷ்குமாரும் என இருவர் மட்டுமே Aspiring Lives அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர்.


கடந்த 2017ஆம் ஆண்டே பணிகளைத் தொடங்கி, 2018, மே 08-ல் சட்டப்பூர்வமாக பதிந்துள்ள அவர்களது அறக்கட்டளையின் அடிப்படை நோக்கம் – இளைஞர் மற்றும் சமூக மேம்பாடு. அதன் தொடக்கப்புள்ளியாக வைத்ததுதான் ‘பிரத்யாஷா’ திட்டம். பிரத்யாஷா என்றால் நம்பிக்கை! இந்தத் திட்டத்தின் மூலம் பிறமாநிலங்களில் இருந்து தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து குடும்பத்தைப் பிரிந்ததால் மனநலம் குன்றியவர்களை, அவர்களது குடும்பத்தினரிடமே சேர்த்துவைப்பது.

இதுபற்றி Aspiring Lives நிறுவனர் ஃபாரிஹா சுமனிடம் கேட்டபோது, “ஒரு சிறு தனிமையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது நம்மால். ஆனால், தன் குடும்பத்தினரை, நண்பர்களை கிட்டத்தட்ட 35 ஆண்டுகள்கூட பிரிந்திருப்பவர்களைப் நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகங்களில் இருப்பார்கள். காப்பகங்கள் எங்களை அணுகி, அவர்களிடம் பேச வைப்பார்கள். பாதிக்கப்பட்ட நபர் திடீரென ஆக்ரோஷம் அடையலாம். அவர்மீது துர்நாற்றம் வீசலாம். நமது பேச்சை சட்டை செய்யாமல் போகலாம். எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ரீ-யூனியனில் இருக்கும் மிகப்பெரிய சவாலே பாதிக்கப்பட்டவரிடமிருந்து தகவலைப் பெறுவதுதான். அதைப் பெற்றுவிட்டாலே வேலைகிட்டத்தட்ட முடிந்துவிடும். கிடைக்கும் ஏதோவொரு தகவலை வைத்து இணையதளத்தில் தேடி, அந்த ஊரின் காவல்நிலையத்தை அணுகி முகவரியைப் பெறுவோம். குடும்பத்தினர் நேரே வந்து கூட்டிச் செல்வார்கள். பல ஆண்டுகளாக திரும்பவே மாட்டார் என்ற அவநம்பிக்கையில் காரியம் செய்தவர்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்திருக்கிறோம். ஆனந்தம் பொங்கி கண்ணீராக வழியும் அந்த நிமிடத்திற்காகத்தான் இதெல்லாம்” என்றார் உற்சாகமாக.


 

family rejoining



இதுவரை தமிழகம், கேரளாவில் இருந்து மட்டுமே 15 மாநிலங்களைச் சேர்ந்த 81 பேரை ஒரே வருடத்தில் அவர்களது குடும்பத்தினரிடம் சேர்த்திருக்கிறது Aspiring Lives அறக்கட்டளை. இதற்காக பணமோ, பொருளோ எதிர்பார்ப்பதில்லை. தன் மகளோடு மனநலம் குன்றியநிலையில், சென்னை லிட்டில் ஹார்ட்ஸ் காப்பகத்தில் இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சர்ளாவையும் அவரது மகள் பின்கியையும், அவரது கணவரிடம் சேர்த்துள்ளது Aspiring Lives அறக்கட்டளை. சர்ளாவின் கணவர் சுனிலிடம் பேசியபோது, “சர்ளாவும் மகள் பின்கியும் உறங்குகிறார்கள். இன்று நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம். எல்லா வளமும் கூடிவருகிறது” என்றார் மகிழ்ச்சியான குரலில்.



 

family rejoining 2



ஃபாரிஹா ரியூனியன் விவரங்களை விளக்கிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட மணீஷ்குமார், “வடமாநிலங்களில் அறக்கட்டளைகள் வெறும் கண்துடைப்புக்காகவே செயல்படுகின்றன. நாங்கள் அப்படி இருந்துவிடக்கூடாது என்கிற பயமே இப்போதுவரை நேர்மையாக இயங்கச் செய்கிறது. நம் இந்திய அரசுக்கோ, காவல்துறைக்கோ, பொதுமக்களுக்கோகூட ரியூனியன் பற்றிய புரிதல் கிடையாது. அதனால் ஏற்படும் அலட்சியமே எங்களது பணிக்கு வேகத்தடை. இந்தியா மாதிரியான குடும்பச் சூழலுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு நாட்டிற்கு இது மிகப்பெரிய பின்னடைவு. இந்தியாவிலேயே ஃபாரிஹா மட்டுமே ரியூனியன் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்கிறாள் என்பதே அதற்கு உதாரணம்” என்றார் ஆதங்கத்துடன்.

 

family rejoining 3



இதுதொடர்பாக அரசுகளுக்கு என்ன கோரிக்கை வைக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டபோது, “மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போகிறவர்களை மீட்டு மனநலக் காப்பகங்களில் சேர்த்துவிடுவதே காவல்துறையினர்தான். ஆனால், அவர்களை காவலர்கள் ஒரு புகைப்படம்கூட எடுத்துக் கொள்வதில்லை. எந்தத் தரவுகளையும் பெற்றுக் கொள்வதுமில்லை. இது முறைப்படுத்தப் படவேண்டும். மேலும், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினரும் ஒரு இணைப்பில் இருக்கும்போது, தரவு பரிமாற்றம் கடினமானதாக இருக்காது. அதேபோல், மத்திய அரசு இந்தியா முழுமைக்குமான ரியூனியன் இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கினால், அது தொலைந்து போகிறவர்களைக் கண்டுபிடிக்க பேருதவியாக இருக்கும்” என்று வலியுறுத்துகிறார்கள் இருவருமே.

குடும்பத்தைத் தொலைத்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, அவர்களது அன்பானவர்களின் அழகிய நினைவுகளும், நிமிடங்களும் சேர்ந்தே தொலைந்துபோகின்றன. அதை மீட்டெடுக்கும் Aspiring Lives அறக்கட்டளையின் முயற்சி பாராட்டுக்குரியது.