விழுப்புரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை காவலாளி ஒருவர் நோயாளிக்கு ஊசி செலுத்தும் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு வராததால் மருத்துவமனையில் இரவு நேர காவலாளி தேவேந்திரன் என்பவர் நோயாளிகளுக்கு ஊசி போட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாத நேரத்தில் ஊசி போடுவதுடன், பிரசவமும் தேவேந்திரன் பார்த்துவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுவாக ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என யாரும் சரியாக பணிக்கு வருவதில்லை, இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.