வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (24). இவர் சொந்தமாக லோடு வேன் வைத்து வெளி மாநிலங்களில் இருந்து கருவாடு ஏற்றி வந்து உள்ளூர் கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழிலையும், உள்ளூரில் தண்ணீர் கேன் லோடு ஏற்றும் தொழிலையும் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்துவதாக வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சரவணனை நோட்டமிட்ட தனிப்படை காவல் துறையினர் பிப்ரவரி 4 ஆம் தேதி அவர் வீட்டில் சோதனை செய்ய சென்றுள்ளனர்.
அப்போது சரவணன், கருவாடு மூட்டைகளை இறக்கி வைத்துக்கொண்டு இருந்தார். அதனை தனிப்படையினர் சோதனை செய்தபோது, கருவாடு மூட்டைகளுடன் குட்கா பாக்கெட்டுகள் இருந்த மூட்டைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சரவணனை கைது செய்த தனிப்படை காவல் துறையினர், சுமார் 3 லட்சத்தி 78 ஆயிரம் மதிப்பிலான 495 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றினர். மேலும், போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், கைதான சரவணன் (24) சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து கருவாடு, தண்ணி கேன் லோடு ஏற்றும் தொழில் செய்து வருகிறார். வெளிமாநிலங்களில் கருவாடு லோடு ஏற்றிக்கொண்டு வரும் போதே அதோடு சேர்த்து தடைசெய்யப்பட்ட போதை பொருட்களையும் தமிழகத்துக்கு குறிப்பாக வேலூருக்கு ஏற்றி வந்து அதை தனது வீட்டில் பதுக்கி வைத்துவிட்டு பின்னர் கடைகளுக்கு கருவாடு மற்றும் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் போது போதை பொருட்களையும் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதை இவர் தனி ஆளாக செய்து வந்துள்ளார்” எனக்கூறினர்.