தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது. இந்நிலையில், இன்று கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்று கொண்டு பணியாற்றுபவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சட்டமுன்வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் தாக்கல் செய்தார். தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஊழியர்கள் வேலைநேரம் முழுதும் நிற்கவைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு பல்வேறு உடல் நலக்கேடுகள் ஏற்படுகிறது. ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் நலத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் நின்று வேலை செய்யும் ஊழியர்களுக்கு இருக்கை வழங்க வேண்டும் என்ற கருத்துக்களின் அடிப்படையில் இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் இந்த திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.