கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கஜா புயல் வருவதற்கு முன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சிறப்பாக இயங்கிய தமிழக அரசு, புயலுக்கு பின் நடக்கின்ற நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாதது வேதனைக்குரியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு எந்திரத்தில் போர்க்கால நடவடிக்கைகள் இப்போதைய அவசியம். விழிப்புணர்வு ஏற்படுத்தியதை எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைத்து கட்சிகளும் பாராட்ட தான் செய்தார்கள்.
தமிழக அரசிடமிருந்து எவ்வளவு முதற்கட்ட உடனடி இழப்பீடு வேண்டுமென்ற கோரிக்கை இதுவரை மத்திய அரசுக்கு தமிழக அரசு வைக்காததே அரசு செயல்பாடுகளின் சுணக்கத்தை எடுத்துரைக்கிறது.
பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ இந்நேரம் அழைத்து வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டிருக்க வேண்டும். இதுவரை மத்திய அரசின் சார்பில் சேதங்களை மதிப்பிட பார்வையாளர்கள் குழுவை நியமித்ததாக கூட அறிவிப்பு இல்லை.
எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. தமிழக அரசின் சார்பில் கூட மீட்பு பணிகளை மேற்கொள்ள நிதி இதுவரை ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை.
தேவையான நிதியை உடனடியாக ஒதுக்காமல் அமைச்சர்களும், முதலமைச்சரும் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று அறிவிப்பது ஏற்புடையதல்ல. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துபோய் இருக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வெறுப்பையும், கோபத்தையும் தமிழக அரசு சம்பாதித்து கொண்டிருக்கிறது.
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவில்லை என்றால் விஷக் காயச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழகம், கஜா புயலால் அழிவை சந்தித்திருக்கின்ற பகுதிகள் எதிர்பாராத அளவிற்கு உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
தென்னை, மக்காசோளம், கண்வலி விதை போன்ற அனைத்து விவசாய பயிர்களும் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரைமட்டமாயிருக்கிறது. அதை பற்றி தமிழக அரசிடமிருந்து எந்த இழப்பீடு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாததால் விவசாயிகளின் வேதனையின் அளவு அதிகரித்திருக்கிறது.
எல்லா கட்சி தலைவர்களும் முதல் நாளில் பாராட்டியதை கேட்டு தமிழக அரசு கொஞ்சம் அசந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. விழித்தெழுங்கள் கடமையை செய்யுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.