அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரித்தது.
அதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அனுமதி இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கண்காணிப்பதற்காக பொதுப்பணித்துறை (நிலத்தடி நீர்) மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட 5 அரசுத்துறை அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சும் குடிநீர் விற்பனை நிறுவனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பல குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் பொதுப்பணித்துறை, உணவு கட்டுப்பாட்டுத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்றவற்றின் உரிய அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதையடுத்து கடந்த சில நாட்களாக அவ்வாறு அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம் சிதம்பரம், வேப்பூர், திட்டக்குடி என மாவட்டம் முழுவதும் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்த 28 குடிநீர் விற்பனை நிலையங்கள் மற்றும் போர்வெல்கள் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
நிலத்தடிநீரை பாதுகாக்கும் இந்த அதிரடி நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்கின்றனர். பாரபட்சமின்றி அனைத்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தடிநீரை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். அதேசமயம் தங்களின் தொழில் பாதிக்கப்படுவது குடிநீர் விற்பனை முகவர்கள் இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.