தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை, புராதான சின்னங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 14 புராதான சின்னங்களை, மறு உத்தரவு வரும்வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த நிலையில், இன்று (16.04.2021) காலை தஞ்சை பெரிய கோவிலின் வாசல், தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. பக்தர்கள் மற்றும் சுற்றலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், தொடர்ந்து நான்குகால பூஜை பக்தர்கள் இன்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.