கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் தமிழகத்தில் நேற்று (04.05.2024) முதல் கத்தரி வெயில் தொடங்கியுள்ளது. வரும் 28 ஆம் தேதி வரை என 25 நாட்களுக்கு இந்த கத்தரி வெயில் நீடிக்க உள்ளது. கத்தரி வெயில் காலத்தின் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர் பகுதியில் இரு நாட்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சச்சின் (வயது 25) என்ற இளைஞர் கட்டட வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அதிக வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட சச்சின் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சச்சின் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் நேற்று (04.05.2024) இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். வெயிலினால் இறந்து போனவர் பற்றிய செய்தி பொன்னேரி பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.