கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகள் உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு அரிசி, முட்டை, சத்துமாவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நேற்று (13/07/2020) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அரிசி மற்றும் பருப்பு வழங்குவதாக மாணவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், முன்பு இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளில் வண்டுகள், புழு, பூச்சிகள் அதிகமாக இருந்தது. இதைப்பார்த்த மாணவர்கள் முகம் சுளித்துக் கொண்டே அரிசியை வாங்கிச் சென்றனர். பருப்பு இருப்பு குறைவால் வழங்கப்படவில்லை.
தேங்கியிருந்த புழு, பூச்சி, வண்டுகளுடன் உள்ள அரிசியை மாணவர்களுக்கு வழங்கும் முன்பு ஆய்வு செய்யாமல் வழங்குவது உணவுத்துறைக்குத் தெரியாமலா நடக்கும்? புழுத்த அரிசிகளை மாணவர்களுக்கு வழங்கும் முன்பு அதைச் சற்று யோசிக்க வேண்டாமா? என்று மாணவர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.