கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கேரளாவில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஷவர்மா உணவுகள் தயாரிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் சென்னை அருகே ஷவர்மா செய்ய வைத்திருந்த 350 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
மேலும் சில இடங்களில் சுகாதார குறைபாடுகளுடன் உணவு விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கெட்டுப்போன இறைச்சிகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கடைகளுக்குச் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஆரணியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு நண்பர்களுடன் சிக்கன் தந்தூரி சாப்பிட்ட திருமுருகன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். மாணவரின் உயிரிழப்புக்கு கெட்டுப்போன இறைச்சி காரணமா? என்ற கோணத்தில் அதிகாரிகள் அந்த கடையில் சோதனை நடத்தியுள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது. மாணவனின் இந்த அகால மரணம் ஆரணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.