கடந்த 2018ஆம் ஆண்டு வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத 70 ஆயிரத்து 60 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.
2019ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த இடமாறுதல் அரசாணையில், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார் பதிவாளர் கோபால கிருஷ்ணனை, செங்கல்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இடமாற்றமானது சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்றும், லஞ்சம் பெற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இடமாறுதல் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருப்பு எழுத்து கழகம் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஊழல் எனும் புற்றுநோய் நம்மைக் கொல்கிறது” எனக் கூறிய நீதிபதிகள், ஊழல் காரணமாக நில அபகரிப்புகள் நடப்பதாகவும், நீர் நிலைகள் மாயமாவதாகவும் குறிப்பிட்டனர். மேலும், “தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எப்படி செயல்படுகிறது? அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது? கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளைக் கையாண்டுள்ளது? என்பன குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.